இயற்கை குளியல் பொடி:Mooligai Kuliyal Podi | Herbal Bath Powder
‘நீங்கள் எதை போட்டு குளிப்பதால் இவ்வளவு அழகா இருக்கீங்க!’ இப்படி உங்களை அழகாகமாற்றப்போகும் இயற்கை குளியல் பொடியை தயார் செய்வது எப்படி?
நம்மைப் பார்த்து ஒருவர், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களது சருமம் மிக மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. என்ன சோப் யூஸ் பண்றீங்க?’ அப்படின்னு கேட்டா போதும் நம்முடைய மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிடும். இது எல்லோருக்கும் இயற்கையாக வரக்கூடிய ஒரு சந்தோஷம்தான். உங்களுடைய சருமமானது அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு மாறவேண்டும் என்றால், செயற்கையான சோப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையாகவே அழகு தரும் பொருட்களைப் பயன்படுத்தி குளிப்பது மிகவும் நல்லது. அப்படி ஒரு பொடியை தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பொடியை தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
பச்சைப்பயறு-1/2 kg
கஸ்தூரி மஞ்சள்-100g
பூலாங்கிழங்கு-100g
ஆவாரம்பூ-100g
காய்ந்த ரோஜா இதழ்கள்-100g
வெட்டி வேர்-100g
இதில் பச்சை பயிறு மட்டும் மளிகைக் கடையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். மற்ற பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் அல்லது நீங்களே கடையிலிருந்து ரோஜா பூவை வாங்கி உலர வைத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். வெட்டிவேரை வாங்கி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இவை அனைத்தையும் ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து தரும்படி வாங்கிக் கொள்ளவும்.
உங்கள் வீட்டில் எலுமிச்சை பழத் தோலை சேகரிக்க முடிந்தால், சேகரித்து, காய வைத்து பத்திலிருந்து பதினைந்து எலுமிச்சை தோள்களையும் இந்த கலவையோடு சேர்த்துக் அரைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியினை காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கண்ணாடி பாட்டிலிலோ, எவர்சில்வர் டப்பாவிலோ சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்.
தினம்தோறும் குளிக்க செல்லும் போது ஒரு ஸ்பூன் குளியல் பவுடரை சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை உடம்பு முழுவதும் உள்ளங் கைகளால் நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால் போதும். பிறந்த குழந்தையில் இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. சருமம் பளபளப்பாக மாறும்.
இதில் தேவையற்ற முடிகளை பெண் பிள்ளைகளுக்கு வளரவிடாமல் தடுக்கும் பூலாங்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளது. வியர்வை நாற்றம் வரவே வராது. சென்ட் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மாதம் மட்டும் தொடர்ந்து இந்த தூளை பயன்படுத்தி, குளித்து வந்தால் நல்ல வித்தியாசத்தை உணரமுடியும். சோப்பை தள்ளிவைத்துவிட்டு இதை பயன்படுத்தி தான் பாருங்களேன்!
What's Your Reaction?