மாத சம்பளத்தில் பணத்தை சேமிப்பது எப்படி -Money Savings Tips in tamil
How to savings money in tamil
மாத சம்பளத்தில் பணத்தை சேமிப்பது எப்படி..? இதைமட்டும் பாலோ பண்ணுங்க ரொம்ப ஈசி..!
என்னதான் அதிக வரவு செலவு செய்தாலும், நம்மில் பலர் செய்யாத ஒரு விஷயம் என்றால் அது சேமிப்பு தான்.. வீண் செலவு செய்யாதீர்கள், வெளியில் உண்ணாதீர்கள் என வழக்கம் போல இல்லாமல் புதுவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சேமிக்கலாம் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்
உங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை சேமியுங்கள்: நீங்கள் மாத சம்பளம் பெறுபவராக இருந்தால் கண்டிப்பாக உங்களுடைய சம்பளத்தில் 30 சதவீதத்தை சேமிப்பிற்காக ஒதுக்குங்கள். நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால்.. வாங்கும் சம்பளத்தை அப்படியே செலவு செய்வதுதான். அதற்கு பதிலாக 30 சதவீதத்தை சேமிப்பிற்காக முதலில் ஒதுக்கி விட்டு, பிறகு மீதமுள்ள தொகையை மட்டும் செலவு செய்யுங்கள்.
இந்த 30 சதவீத சேமிப்பை நீங்கள் அப்படியே வைத்துவிட வேண்டும் என்பது கிடையாது. அதனை நீங்கள் PPF, NPS, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் என எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்தச் சேமிப்பை அப்படியே ஒரே ஒரு திட்டத்தில் முதலீடு செய்யாமல் பிரித்துப் பிரித்து முதலீடு செய்யும்போது, காலப்போக்கில் உங்களுடைய வருமானம் வளர்வதற்கு வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கான சேமிப்பு வழிமுறைகள்:
· பெண்கள் சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் முதலில் வீட்டின் அத்தியாவசிய தேவைகள் போக, மற்ற செலவுகள் என்ன என்பதை இல்லத்தரசிகள் முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். மாதம் மாதம் மளிகை சாமான்கள், வீட்டு பராமரிப்புப் பொருள்கள், குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள் போன்றவற்றை வாங்கும் போது எது இல்லையோ? அதை மட்டும் வாங்கப் பழகவும். அதிகமாக வாங்க வேண்டாம். இதனால் பொருள்கள் வீணாவதோடு பணமும் அதிகமாக செலவாகும்.
· உங்களுக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் இதில் ஒரு தொகையை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். முன்பெல்லாம் நம்முடைய அம்மாக்கள் மளிகை சாமான் டப்பாவில் மறைத்து வைத்திருப்பார்கள். வீட்டில் தேவைப்படும் போது அந்த பணத்தை நாம் எடுத்துவிடுவோம். இதனால் இந்த முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே வங்கி சேமிப்பு கணக்குகள், தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் உங்களது பணத்தை சேமித்து வைக்க முயற்சி செய்யவும்.
· நகைகளை விரும்பாத பெண்கள் யாருமே இருக்க முடியாது. வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் குடும்ப சூழலால் வாங்க முடியாது. நகைகள் வாங்குவது சேமிப்பின் வழிமுறைகளில் ஒன்றாக இருப்பதால், 1000 ரூபாயிலிலுந்து உங்களால் முடிந்த அளவிற்கு மாதம் மாதம் நகைச் சீட்டிற்கு பணத்தை சேமித்து வைக்கவும்.
· சுற்றுலா செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்பதால், வேலை, நேரம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப உங்களது பயணத்திட்டத்தைத் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
· வீடுகளில் தேவையற்ற நேரங்களில் எரியும் மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றை அணைத்துவிட வேண்டும். இதன் மூலம் மின் கட்டண செலவைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
· வீடுகளில் சிறிய உண்டியல்களைப் பயன்படுத்தவும். செலவு போக மீதமுள்ள சில்லறை காசுகளை அதில் மறக்காமல் போட்டுவைக்கவும். சிறுக சிறுக சேமிக்கும் பணம் கூட எதிர்காலத்தில் நமக்கு பேருதவியாக வந்து நிற்கும்.
·
குறைத்து செலவு செய்தல்: நீங்கள் மாதத்திற்கு நான்கு முறை படத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதனை நீங்களே குறைத்த மாதத்திற்கு ஒருமுறை என மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களிடம் அதிக பணம் இருந்தால் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு செல்லலாம்.
ஆனால் மாதம் ஒரு சிறிய தொகையை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு தான் இந்த வழி. நீங்களே மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் தேர்வு செய்து ஒரு ரூபாய் கூட அன்று செலவு செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இதனை ஆங்கிலத்தில் "No Spending Day" என்று கூறுவர். இதுபோல உங்களுக்கு நீங்களே ஒரு வரையறை வைத்து செலவு செய்யாமல் இருக்கும்போது, அதில் ஒரு குறிப்பிட்ட தொகை மிச்சப்படுத்தப்படும். அதனை நீங்கள் சேமிப்பதற்காக வைத்துக் கொள்ளலாம்.
தேவைப்படும் பொருட்களை வாடகைக்கு எடுத்தல்: வீட்டு விசேஷங்கள் அல்லது திருமண விழாக்கள் போன்ற முக்கியமான விசேஷங்களில் பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட ஆடைகளை அணிய விரும்புவார்கள். இது போன்ற ஆடைகள் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 ஆயிரம் வரை இருக்கலாம். ஒரு நாள் அணிவதற்காக அதிக பணம் கொடுத்து ஆடைகளை வாங்கி வைத்து, அதன் பிறகு அதனை பீரோக்களில் பூட்டி வைத்து விடுவோம்.
ஒரு நாள் திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு அணியும் ஆடைகளை முயன்ற அளவு வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். பலருக்கும் ஆடையில் மிச்சப்படுத்தி சேமித்து வைத்து என்ன செய்யப் போகிறோம்.. என்ற கேள்வி வரலாம். சிறு துளி பெருவெள்ளம் அல்லவா.. ரூ. 10,000 கொடுத்து வாங்கும் ஆடையை நாம் குறைந்தது பத்து முறையாவது அணிந்தோம் என்றால், வாங்கியதற்கு ஒரு மன திருப்தி கிடைத்துவிடும். ஆனால் அவ்வாறு அணியாமல் பீரோக்களில் வைப்பதில் எந்த பலனும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே ஒருநாள் பயன்படுத்தப்படும் பொருட்களை வாடகைக்கு எடுப்பதே சிறந்தது.
தேவை மற்றும் விருப்பத்தை உணர்ந்து செயல்படுதல்: உங்களுடைய தேவை என்ன.. மற்றும் விருப்பம் என்ன.. என்பதை தெரிந்து கொண்டாலே, இதிலிருந்து நீங்கள் ஒரு பெரிய தொகையை மிச்சப்படுத்த முடியும். சான்றாக உங்களுக்கு பசி எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்களுக்கான தேவை ஏதோ ஒரு சாப்பாடு. ஆனால் நீங்கள் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அது உங்களுடைய விருப்பம். உங்களால் இயன்ற அளவு விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் தேவையை உணர்ந்து செயல்படும்போது, உங்களால் அதிலிருந்து ஒரு தொகையை சேமிக்க முடியும். எனவே எப்பொழுதும் அடிப்படை தேவை உங்களுக்கு என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதற்காக மட்டும் செலவு செய்யுங்கள்.
What's Your Reaction?