துளசியின் நன்மைகள்/Thulasi Health Benefit in Tamil

இளமையை காக்கும் துளசி...இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

Dec 30, 2024 - 16:57
 0  5
துளசியின் நன்மைகள்/Thulasi Health Benefit in Tamil
துளசி
துளசியின் நன்மைகள்/Thulasi Health Benefit in Tamil

                நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மூலிகைகளின் அரசி!

                 ‘துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல்லில் அலட்சியப்படுத்தும்

துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம். அதனால்தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பதுப் போல நோய் நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.

காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து!

                    மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்துக்கொண்டே இருக்கிறது... ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர் வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண நடவடிக்கைகளில் காட்டுவதில்லை. ஆனால், இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும் காய்ச்சல் என எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ் காய்ச்சல், ஜப்பானியர்கள், என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ‘‘10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர்  நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்’’ என்கிறது சித்த மருத்துவம்.

இருமலை இல்லாமல் செய்துவிடும்!

                 சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

ரத்த அழுத்தம் குறையும்!

             இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். 'நீரிழிவு' என்ற சர்க்கரை நோய், 'ஒபிசிட்டி' என்ற உடல் பருமன், 'பிளட் பிரசர்' என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க, எத்தனை தூரம் ஓடினாலும், நடந்தாலும், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என ஊட்டச்சத்து குடித்த குழந்தைப் போல தொப்பை மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து எது எதையோ வாங்கி சாப்பிட்டும் பயனில்லை என புலம்புபவர்களுக்கான தீர்வும் துளசியிடத்தில் இருக்கிறது. துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.

தோல் நோய் தொல்லை, இனி இல்லை!

            துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

என்றும் இளைமை!

                   இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.

உடலுக்கான கிருமிநாசினி!

                   துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி. ஆனால், நாம் தான் பயன்படுத்துவதில் அக்கறைக்காட்டுவதில்லை. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது. ‘உடலில் வியர்வை வாடை போகவே மாட்டேங்குது’ என கவலைப்படுபவர்கள், குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால், வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.

மொத்தத்தில் துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0