வீட்டில் இருந்தே வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி? எங்கேயும் அலைய வேண்டிய அவசியமில்லை..!
பொதுவாக வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்க போகிறோம் என்றால் முதலில் அந்த சொத்தில் எதுவும் வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில்தான் சம்பந்தப்பட்ட சொத்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள நமக்கு வில்லங்க சான்றிதழ் பயன்படுகிறது. வில்லங்க சான்றிதழ், ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது.

ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளும் ஆவணமாக வில்லங்க சான்றிதழ் உள்ளது. முன்பு வில்லங்க சான்றிதழ் பெற சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று வில்லங்க சான்றிதழ் கேட்டு நாட்கணக்கில் காத்திருந்து வாங்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
டிஜிட்டல் புரட்சியால் அரசின் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு சேவைகளை முடிந்த அளவுக்கு டிஜிட்டல்மயமாக்கி வருகின்றன. அந்த வகையில் பத்திர பதிவுத் துறையும், துறை செயல்பாடுகளை கணினி வழியில் செய்து வருகிறது. பொது மக்கள் வில்லங்க சான்றுகளை இணையவழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் இருந்தே இணைய வழி மூலமாக வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருப்பதால் பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே நாம் வில்லங்க சான்றிதழ் பெறலாம். ஆன்லைனில் வில்லங்க சான்றிதழை எப்படி பார்ப்பது மற்றும் டவுன்லோடு செய்வது என்பதை பார்ப்போம்.
1. முதலில் கூகுளில் tnreginet.gov.in என்று டைப் செய்து பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அடுத்து மின்னணு சேவைகளை (e services), வில்லங்க சான்று (encumbrance certificate), வில்லங்க சான்று பார்வையிடுதல் (EC View) உள்ளே செல்ல வேண்டும்.
3. வில்லங்க சான்றுக்கான தேடுதல் பகுதியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு நாம் வில்லங்க சான்றிதழை நாம் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவுத்துறை அலுவலகத்தை பொறுத்து ஆன்லைனில் தற்போது 1970, 1975, 1980ம் ஆ்ண்டு முதல் வில்லங்க சான்றிதழ் எடுத்துக் கொள்ளலாம். 1970க்கு முந்தைய வில்லங்க சான்றிதழ் வேண்டுமானால் சம்பந்தப்பட பதிவுத்துறை அலுவலகத்துக்குதான் செல்ல வேண்டும். அதுவும் தற்போது ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல். இதனால் வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக எங்கேயும் நாம் அலைய வேண்டியதில்லை வீட்டில் இருந்தே வில்லங்க சான்றிதழை நாம் பெற்றுக் கொள்ளலாம்
What's Your Reaction?






