வெயில் காலத்தை எதிர்கொள்வது எப்படி? - விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்றத்தக்க நலக் குறிப்புகள்

How to face the hot season? - Health tips to follow from waking up to sleeping

Feb 24, 2025 - 11:41
 0  0
வெயில் காலத்தை எதிர்கொள்வது எப்படி? - விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்றத்தக்க நலக் குறிப்புகள்

வெயில் காலத்தை எதிர்கொள்வது எப்படி? - விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்றத்தக்க நலக் குறிப்புகள்

வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அப்பாடா வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீட்டிற்குள்ளேயே இருந்து விடலாமா என்று தோணும். அந்த அளவுக்கு சும்மா வெயில் சுட்டெரிக்கும். கடந்த சில வருடங்களாகவே கோடை காலத்தில், கடும் வெயில் நிலவுவதைப் பார்த்து வருகிறோம். அந்தவகையில் இந்த வேனிற் காலத்தை பயமில்லாமல் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.

குளியல்: வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

கற்றாழை கூழ் அல்லது எலுமிச்சையைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அதிகரித்துக்கொள்ளலாம். நீரோட்டம் உள்ள ஆறுகளில் குளித்து, வேனிற் காலத்தைக் கடத்திய நம்முடைய முன்னோர்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. எனவே நீரோட்டம் மிக்க ஆறுகள், அருவிகளில் குளிப்பது உடலுக்குக் குளிர்ச்சியை மட்டுமல்லாமல் உற்சாகத்தையும் தரும்.

 

மருத்துவ அறிவியலை முன்னித்தியே நம் முன்னோர்கள் ஒவ்வொரு பருவ காலத்துக்கும் தகுந்த உணவு முறைகளைக் கடைப்பிடித்துவந்தனர். வெயில் காலத்தில் காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிக்காத உணவையும் ஒதுக்குவது அவசியம். உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய்ப் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நீர்க்காய்களான பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உணவு முறை தவறாக இருந்தால் செரியாமை, வயிற்றுப்போக்கு, ஆசனவாய் எரிச்சல், மூலம் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.

பேயன் வாழைப்பழம், சீத்தா, கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் (கிர்ணி) போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தட்பத்தைக் கொடுக்கும். வெயில் காரணமாக வறண்டுவிட்ட உடல்தாதுகளுக்கு வலுவூட்ட, உணவில் நெய்யைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அவசியம். கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவை வேனிற் காலத்தைக் குளிர் விக்கும் பானங்கள்.

 

 

மண்பானை மகத்துவம்

வேனிற் காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். வாய் சிறுத்த பானைகளை, ‘தொகுவாய் கன்னல்’ (வாய் குறுகிய நீர்ப்பாண்டம்) என்று பத்துப்பாட்டில் ஒன்றான `நெடுநல்வாடைநூல் குறிப்பிடுகிறது. நீரைக் குளிர்விப்பதற்குக் குளிர்பதனப் பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிஜ்ட்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம் என்கிறது சித்த மருத்துவம். குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம்.

 

ஆடையில் அக்கறை

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்குத் தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. அதிலும் மகாத்மா முன்மொழிந்த கதர் ஆடைகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம்

.

ஆவாரை தலைப்பாகை

போக்குவரத்து வசதி இல்லாத காலங்களில் நெடுந்தூர நடைப்பயணம் மேற்கொள்வோரும் சரி, வெயிலில் உழைக்கும் விவசாயிகளும் சரி, வெப்பத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்திய முக்கிய இயற்கை உபகரணம் ஆவாரை இலையும் பூவும். தலையில் ஆவாரை இலை, பூக்களை வைத்துக் கட்டிக்கொண்டு அல்லது முண்டாசுக்கு அடியில் வைத்துக்கொண்டு வெப்பத்தைத் தணித்துக்கொண்டனர். இன்றைய காலத்தில் அப்படித் தலையில் கட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியாது.

எனினும் வீட்டில் இருக்கும்போது, இதை முயற்சிக்கலாம். வெயிலில் தொப்பி அணிந்து செல்லும் பழக்கமுடையவர்கள் தொப்பிக்கு அடியில் ஆவாரை இலை, பூ மற்றும் வேப்ப இலைகளை வைத்துக்கொள்ளலாம். ஆவாரை தலைப்பாகையானது, உடலில் உண்டாகும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிக வெப்பத்தால் உண்டாகும் தலைவலியையும் தடுக்கும். வெப்பநிலை அதிகரித்து இருக்கும் பதினோரு மணி முதல் மூன்று மணிவரையிலான பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அத்தியாவசியம் எனில் குடையுடன் செல்லலாம்.

மரங்களின் தாலாட்டு

மதிய நேரங்களில் வாய்ப்பிருந்தால் மரங்களின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவது உடல் மற்றும் மனதுக்கு இதம் தரும். ஆனால், இரவில் அடர்ந்த மரங்களுக்கு அடியில் உறங்குவது கூடாது. ஏனெனில், பகலில் பிராண வாயுவை (O2) அள்ளிக் கொடுக்கும் மரங்கள், இரவில் கரியமில வாயுவை அதிக அளவில் உமிழ்கின்றன. இதை `இராமரமுஞ்சாராஎன்கிறது `ஆசாரக்கோவைநூல். அனல் பறக்கும் வேனில் காலத்தில், அதிக நேரம் பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். வேனிற் காலத்தில் மெத்தையையும் தவிர்க்கலாம். வீட்டில் ஜன்னலைத் திறந்து வைத்து, நல்ல காற்றோட்டத்தை உண்டாக்குவதும் அவசியம்.

வாசனைப் பொருட்கள்

வியர்வை நாற்றத்தைத் தடுக்கப் பல வகையான செயற்கை வாசனைத் திரவியங்கள், சந்தைகளில் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவை தரமானவையா, நம் உடலுக்கு ஏற்றவையா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதிகரிக்கும் வியர்வையோடு சேரும் செயற்கை திரவியம் வேதியியல் மாற்றம் அடைந்து, ஒரு வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு, ஒவ்வாமை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

வியர்வை நாற்றத்தைத் தடுக்கச் செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாகச் சந்தனச் சாந்து, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தலாம். ஆடைகளுக்கு நறுமணம் ஊட்டத் துவைக்கும்போது, சில வகை திரவங்களைச் சேர்ப்பதுபோல, முற்காலத்தில் அகிற் புகையூட்டி ஆடைகளுக்கு நறுமணம் சேர்த்ததாக `மதுரைக் காஞ்சிநூல் குறிப்பிடுகிறது. கூந்தலுக்கும் உடலுக்கும் மணமூட்ட அகிற்கட்டை புகையைச் சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இப்போதும் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

ஏ.சி.நல்லதா?

ஜன்னல்களில் தென்னை அல்லது பனையோலை `தட்டிஅமைத்து, அதில் வெட்டிவேர், வேம்பு இலை, புங்கன் இலைகளைச் செருகி வைத்து நீர் தெளித்து, இயற்கை `ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தி வந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்குப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை `ஏ.சிஇல்லாத வீடுகளே இல்லை என்பதுபோல் ஆகிவிட்டது. அதிக நேரம் ஏ.சி. பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன சில நோய்களின் அறிகுறிகள்.

இதன் காரணமாகத் தோல் வறட்சி, நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் சோர்வு, கப நோய்கள், நாளவிபாதம் (வெரிகோஸ் வெய்ன்) போன்றவை உண்டாகப் பல மடங்கு வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து நீண்ட காலத்துக்கு ஏ.சி. பயன்படுத்துவதால், நம் உடலை மாசுபடுத்துவது மட்டுமன்றி, சுற்றுச்சூழலையும் பெருமளவுக்குச் சீரழிக்கிறோம். ஏ.சி. பயன்படுத்தப்படும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக்கொண்டால், உடலுக்கும் பூமிக்கும் நலம் நிச்சயம்.

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0