திருப்பூர் குமரன் பற்றிய கட்டுரை

இந்திய மண்ணின் விடுதலைக்காக போராடிய போராட்ட தியாகியே திருப்பூர் குமரன் ஆவார். இவர் ஆங்கிலேயரின் சர்வதிகார ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த மாமனிதராகவே திகழ்கின்றார். இவருடைய பெருமையானது இன்றும் பேசப்பட்டு வருகின்றது.
திருப்பூர் குமரன் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப கால வாழ்க்கை
- திருப்பூர் குமரனும் இந்திய சுதந்திர போராட்டமும்
- கொடி காத்த குமரன்
- திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றும் நினைவகம்
- முடிவுரை
முன்னுரை
கொடிகாத்த குமரன் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவரே திருப்பூர் குமரன் ஆவார். அதாவது தான் இறக்கும் நிலையிலும் கூட தன் தேசியக் கொடியை காத்த வீரனே திருப்பூர் குமரன். இவர் இந்திய தேசத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியதாகும். தனது தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுடையவராக வாழ்ந்த திருப்பூர் கொடிகாத்த குமரன் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1904ம் ஆண்டு ஒக்டோபர் 4ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் நாச்சிமுத்து மற்றும் கருப்பாயி ஆவார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும்.
இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளி படிப்பை ஆரம்ப பள்ளியோடு இடை நிறுத்திக் கொண்டார். இதன் காரணமாக நெசவுத் தொழிலை மேற்கொண்டு வந்தார்.
இவர் 1923ல் ராமாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது சிறுவயது முதலே நாட்டின் மீது பற்றுடையவராகவே திகழ்ந்ததோடு காந்தியின் கொள்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
திருப்பூர் குமரனும் இந்திய சுதந்திர போராட்டமும்
திருப்பூர் குமரன் தனது இந்திய தேசத்தின் மீது அதிக பற்றுடையவராக காணப்பட்டதோடு நின்று விடாமல் காந்தியடிகளின் கொள்கைகளையும் பின்பற்றி வந்தார்.
மேலும் காந்தியடிகளின் போராட்டங்களில் கலந்து கொண்டு தேசத்தினை ஒருங்கிணைக்கும் பாடல்களையும் பாடி வந்தார்.
தேசத்தின் சுதந்திரத்தினை அடிப்படையாக கொண்டு நாடகங்களையும் அரங்கேற்றி வந்ததோடு திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்திலும் ஓர் உறுப்பினராக காணப்பட்டார். இவ்வாறாக தனது நாட்டின் விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டவராவார்.
கொடி காத்த குமரன்
1932ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்கெதிராக போராட்டம் நடைபெற்றது. இத்தகைய போரில் திருப்பூர் குமரன் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பொலிஸாரினால் தாக்கப்பட்டார்.
இவ்வாறாக தாக்கப்பட்டு மண்ணில் விழுந்த போதும் அவர் தன் கைகளில் பற்றியிருந்த தேசக் கொடியினை கீழே விழாது உயர்த்தி பிடித்த வண்ணமே காணப்பட்டார். இதன் காரணமாக இவர் இன்று கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படுகின்றார்.
திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றும் நினைவகம்
மேலும் திருப்பூரில் சாலை மற்றும் கல்லூரி போன்றவை இவரது தியாகத்தை போற்றியே காணப்படுகின்றமை இவரது சிறப்பினை எமக்கு எடுத்துக் கூறுகின்றது. அதே போன்று 2004ம் ஆண்டில் இவரது நினைவை முன்னிட்டு தபால் தலையை இந்திய அரசானது வெளியிட்டமையானது இவரது தியாகத்தையே பறைசாற்றுகின்றுது.
முடிவுரை
தனது உயிரையும் துச்சமாக கருதி தனது நாட்டிற்காக வீர மரணத்தை அடைந்தவரே திருப்பூர் குமரன் ஆவார்.
இவர் தன்னுடைய நாட்டின் விடுதலைக்காக போராடிய வீர தியாகியாகவும் காணப்படுகின்றார் என்பதோடு இன்றும் எம் மனக்கண் முன் கொடி காத்த வீரனாக திகழ்பவர் திருப்பூர் குமரனே!
What's Your Reaction?






