திருக்குறள் நீதிக்கதைகள்
துறவியின் அன்பு

குறள்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நா
நன்னயம் செய்து விடல்.
விளக்கம் :
தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.
கதை :
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவி பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தளை பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.
அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்
அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார், ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?
துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.
நீதி : நமக்கு ஒருவர் தீமையை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.
What's Your Reaction?






