பஞ்சும் பசியும்
தமிழ் சிறுகதைகள்

பொழுது சாயத் தொடங்கி விட்டது.
மேல் வான விட்டத்தில் அந்திக் கருக்கலின் கபிலக் கறை படியத் தொடங்கியது; கூடுகளை நோக்கிச் செல்லும் வெள்ளிய கொக்குக் கூட்டம் ஒழுங்கோடு அணிவகுத்துப் பறந்து சென்று மறைந்தது. ஆறரை மணி கூட்ஸ் வண்டி ரயில்வே பாலத்தின் மீது கடகடத்து ஓடுகின்ற சப்தம் வாய்க்கால் நீரின் வழியாகப் பரவிச் சிலிர்த்து கும்மென்று எதிரொலித்து அடங்கியது. வாய்க்கால் கரையை ஒட்டியிருந்த மைதானத்தில் ‘பாட்மிண்டன்’ விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அப்போதுதான் ஆட்டத்தை முடித்தார்கள்.
ஆட்டம் முடிந்ததும் சங்கர் கோர்ட்டை விட்டு வெளியே வந்தான்.
“என்ன சங்கர்? இன்னொரு ‘கேம்’ ஆடலாமா?’ என்று கேட்டான் ஒரு மாணவன்.
“இனிமேல் கண்ணாம்பூச்சி வேண்டுமானால் ஆடலாம் பந்தாட முடியாது. வாப்பா வெளியே நேரம் இருட்டிப் போச்சு” என்றான் சங்கர்.
“ஆமாம்பா நேரமாச்சு; போவோம். பரீட்சையிலே பந்தாடுவது எப்படின்னு கேள்வி கேட்க மாட்டான். போயி, நேரங் காலத்திலே படிக்க உட்காரணும்” என்றான் மணி.
பரீட்சை என்றதும் அந்த மாணவர்களின் பேச்சு அதன் பால் திரும்பி விட்டது.
பரீட்சையை நினைத்தாலே பயமாத்தானிருக்கு. போன வருசம் ரிசல்ட்டைப் பார்த்தியா? எவ்வளவு பேர் பெயில் ஆயிட்டாங்க!
“இவ்வளவு ஸ்ட்ரிக்ட் வாலுவேஷன் கூடாதப்பா. நாமும் எவ்வளவு பணத்தைச் செலவழிச்சி, மூச்சைத் தொலைச்சிப் படிச்சித் தொலைக்கிறோம். அப்படிப் படிச்சும் இத்தனைப் பேரைப் பெயிலாக்கினா?” என்று அங்கலாய்த்தான் ஒரு மாணவன்.
இதற்குள் சங்கரும் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள முன் வந்தான்.
“என்னப்பா, விவரம் தெரியாமல் பேசுறியே? இப்பவே வேலையில்லாத் திண்டாட்டம் ஜாஸ்தியா இருக்கு. இன்னும் நிறையப் பேரைப் பாஸ் பண்ண விட்டா, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்காதா? எல்லாத்தையும் பாஸ் பண்ணிவிட்டுட்டு, அப்புறம் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகப்படுத்துறதற்கு நம்ம சர்க்காருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்றான் சங்கர்.
“பாஸ் பண்ணுறது கிடக்கட்டுமப்பா. நாம எவ்வளவு தான் முட்டி மோதிப் படிச்சாலும், சமயத்திலே பரீட்சைப் பேப்பரே ‘அவுட்’ ஆயிடறது. அப்புறம் திரும்பவும் வையடா பரீட்சைன்னு வாணாளை வாங்குறது. “நல்ல பரீட்சை” என்று சலித்துக் கொண்டான் வேறொருவன்.
“பரீட்சை பேப்பர் அவுட்டாவதைச் சொல்ல வந்துட்டியே. பட்ஜெட் ரகசியங்களே சந்தி சிரிக்குது!” என்று குறுக்கிட்டான் சங்கர்.
“நம்ம பாடு கூடப் பரவாயில்லை. என்னமோ மார்ச்-செப்டம்பர்-மார்ச் என்றாவது கரையேறி விடலாம். ஆனால், ஹைஸ்கூலைச் சொல்லு. ஸெலக்ஷன்னு ஒண்ணு வச்சி, ஒண்ணுக்குப் பாதியை வடிகட்டி அனுப்புறாங்க. அப்படி அனுப்பியும் பாதிக்கு மேலே பாஸாகலைன்னா, அர்த்தம் என்ன?” என்று கேட்டான் ஒருவன்.
“ஆறாவது பாரத்திலே படிக்க லாய்க்குன்னுதானே அஞ்சாவது பாரத்திலே பாஸ் பண்ணி விடுதாங்க. அப்புறம், நம்மக் கிட்டே ஆறேழு மாசச் சம்பளத்தையும் வசூல் பண்ணி விட்டு, இடைவழித் தட்டிலே வடிகட்டி நிறுத்தினா? எதுக்கு இந்த ஸெலக்ஷன்?” என்று அங்கலாய்த்தான் ஒரு ஹைஸ்கூல் மாணவன்.
“தம்பி, எதற்கென்று நீ ஒருத்தன் கேட்டா போதுமா? நீ கேக்கணும்; உன்னோடொத்த மாணவர்கள் எல்லோரும் கேக்கணும்; உன்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறாரே, உன் அப்பா - அவர் கேட்கணும். எல்லோருமாச் சேர்ந்து இந்தச் சர்க்காரைக் கேக்கணும். நாம் ஒன்றுபட்டால் தானப்பா இந்த ஊழலையெல்லாம் ஒழிக்க முடியும்” என்று கூறினான் சங்கர்.
“சரி, சரி, புறப்படுங்க, நேரமாகுது. சங்கரிடம் நீங்க பேச்சுக் கொடுத்தால், அவன் இப்போதைக்குள்ளே ஓய மாட்டான்” என்று குறுக்கிட்டுப் பேசினான் மணி.
“என்ன மணி, என்னை என்ன அதிகப்பிரசங்கின்னா சொல்றே?” என்று கேட்டான் சங்கர்.
“இல்லையப்பா. நீ சின்னப் பிரசங்கிதான். இருந்தாலும் பிரசங்கம் பிரசங்கம்தானே!” என்று கிண்டல் செய்தான் மணி.
சங்கர் அதற்குப் பதிலே கூறாமல், சிரித்துக் கொண்டே கோர்ட்டுக்கு அருகில் நின்ற மோரீஸ் மைனர் காரில் ஏறி உட்கார்ந்தான்; காரை ஸ்டார்ட் பண்ணியவாறே யாராவது வர்ரீங்களா? என்ன மணி, நீ?” என்று கேட்டான்.
“இல்லை சங்கர், நாங்கள் நடந்தே வருகிறோம். நீ போ” என்று வழியனுப்பினான் மணி.
மோரீஸ்மைனர் அங்கிருந்து அகன்று சென்றது.
மாணவர்கள் அனைவரும் தங்கள் கையிலிருந்த பாட்மிண்டன் மட்டைகளை அலங்காரமாக வீசியாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி, ரோட்டுப் பாதைக்கு வந்தனர்.
மேலை வானத்தில் சுக்கில பட்சத்துப் பிறைப் பிள்ளை தத்தித் தவழ்ந்து மேலேறி ஒளிபெற்றுத் துலங்கத் தொடங்கியது; சந்திர கலையின் மங்கிய ஒளி மூட்டத்திலே அம்பாசமுத்திரம் நகரம் தெளிவற்ற சொப்பனம் போல் மங்கலாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ரோட்டுப் பாதையில் ஆளரவம் அடங்கி மோனசமாதி குடியேறிக் கொண்டிருந்தது.
ஹாயாக ஒரு ஹிந்துஸ்தானி மெட்டைச் சீட்டியடித்துக் கொண்டு வந்த ஒரு மாணவன் திடீரென்று தன் சங்கீதத்தை அந்தரத்திலே விட்டு விட்டுப் பேசத் தொடங்கினான்.
“என்னப்பா, சங்கரின் பேச்சைப் பார்த்தியா? அவன் எதை எடுத்தாலும் அரசியல் கண் கொண்டுதாம்பா பார்ப்பான்!”
உடனே பக்கத்தில் வந்த மாணவன் ஒருவன், “அவன் எதைப் பத்தின்னாலும் அழகாக விவாதம் செய்கிறான். ஆனா, அவன் என்னமோ கம்யூனிஸ்ட் அனுதாபியாமே, கேள்விப்பட்டேன்” என்று ஆரம்பித்தான்.
“கம்யூனிஸ்டோ, சோஷியலிஸ்டோ? அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது! சும்மா பொய்யா சொல்றான்? காலேஜிலே அவன் பேசுகிறான் என்றால், எவ்வளவு கூட்டம் கூடுகிறது? இல்லாட்டி, இந்த வருஷம் கல்லூரித் தமிழ்ச் சங்கத் தேர்தலிலே, அவன் அத்தனை மெஜாரிட்டி ஓட்டு வாங்கி ஜெயித்திருப்பானா? நாமெல்லாம் பள்ளிக்கூடப் புத்தகங்களே பரமபதம் என்று கிடக்கிறோம். அவனுக்கு உலக ஞானம் எவ்வளவு இருக்கிறது, தெரியுமா?” என்று சங்கரின் பெருமையை உற்சாகத்தோடு கூற முயன்றான் வேறொருவன்.
“அவன் மட்டும் என்ன? அவன் தங்கச்சி கமலா இருக்கிறாளே, அவள் கூட அப்படித்தான். நம்ப காலேஜிலே ‘இண்டர் காலேஜியட்’ பேச்சுப் போட்டி நடந்ததே அன்னிக்கு அவள் என்னமாப் பேசினாள் தெரியுமா? அவளுக்குப் பரிசு கிடைத்ததிலே ஒண்ணும் ஆச்சரியமில்லை” என்று கூறினான் இன்னொருவன்.
கமலாவைப் பற்றிய இந்தப் புகழுரையைக் கேட்டதும் மணியின் உள்ளம் குதூகலம் அடைந்து விம்மி நிமிர்ந்தது. அவன் முகத்தில் புன்னகையும் பூரிப்பும் அரும்பி மலர்ந்தன. இருளில் எவரும் அவனுடைய உணர்ச்சிப் பரவசத்தை கண்டு கொள்ளவில்லை. உடன் வந்த மாணவர்கள் பலரும் கமலாவின் அழகையும் திறமையையும் பற்றிப் பேசிக் கொண்டு வருவதைக் கேட்கக் கேட்க மணியின் உள்ளம் பெருமிதத்தால் இறுமாப்பு அடைந்தது.
அந்த உணர்ச்சிப் பரவசத்தால் அவனால் அதிக நேரம் ஊமையாக இருக்க முடியவில்லை; திடீரென்று மணி வாய் திறந்தான்; “என்னப்பா, இவ்வளவு அழகும் திறமையும் உள்ள கமலாவைக் கல்யாணம் பண்ணினால்...”
மணியின் இந்தப் பேச்சை, கூட வந்த மாணவர்களின் திடீர்ச் சிரிப்பும், கலகலப்பும் இடையில் முறித்து விட்டன.
“அடடே! மணி! நீ அதற்குள் கல்யாணத்திற்குப் பிளான் போட்டு விட்டாயா?” என்று கேலியாகக் கேட்டான் ஒரு மாணவன்.
“அட, சரிதாம்பா - இப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தால், எவன் தான் வேண்டாம் என்பான்?” என்றது ஒரு குரல்.
“கொடுத்து வெக்கணும் பாரு!” என்றது மறு குரல்.
“நீ சொன்னே பாரு. அது நூத்திலே ஒரு வார்த்தை, கொடுத்துதான் வைக்கணும். ஆனா சும்மா உன்னையும் என்னையும் போலுள்ள வெள்ளை வேட்டிப் பண்டாரங்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமா? தாதுலிங்க முதலியார் பலே பேர் வழி. அவர் அவளுக்கு எந்த லட்சாதிபதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறாரோ!” என்று ஆரம்பித்தான் வேறொரு மாணவன்.
“எந்த லட்சாதிபதி வீட்டிலோ...?” இந்த வார்த்தையைக் கேட்டதும் மணியின் மனம் இன்னதென இனம் காண முடியாத பயத்தால் ஒரு கணம் சிலிர்த்து நடுங்கியது. அந்தப் பயத்தைப் போக்குவதற்காக அவன் அந்த வார்த்தைக்குப் பதில் வார்த்தை தேட முனைந்தான்.
“கமலாவே யாரையேனும் விரும்பிக் கல்யாணம் செய்து கொள்ள முன்வந்தால்? இவ்வளவெல்லாம் பேசுகிறவள் பணத்துக்கு ஆசைப்பட்டுத் தன் தந்தைக்குப் பணிந்து விடுவாளென்றா சொல்கிறாய்?” என்று தனது மனத்தை உறுத்திய சந்தேகத்தைச் சங்கேதமாக வெளியிட்டான் மணி.
“வாஸ்தவம்தான். பெண்கள் சம்மதிச்சால் விஷயம் முடிந்த மாதிரிதான்.!” என்று ஆமோதித்தான் வேறொருவன்.
“என்னப்பா, நீ உலகம் தெரியாமல் பேசறே? இப்போ நடக்கிற கல்யாணங்கள் எல்லாம் பெண்களின் சம்மதத்தைக் கேட்டா நடக்குது? தாதுலிங்க முதலியாராப் பார்த்து கமலாவை எந்தக் கிணற்றில் தள்ளினாலும் அவள் விழ வேண்டியவள் தானே! நம்ம நாட்டுப் பெண்களின் நிலை அதுதானே!” என்று உலக வழக்கை உபதேசித்தான் வேறொருவன்.
இதைக் கேட்டதும் மணியின் உள்ளத்திலிருந்த குதூகலமெல்லாம் குடியோடிப் போய்விட்டது. கையெட்டுத் தூரத்தில் தோன்றிய ஓர் அதிர்ஷ்டம் திடீரென்று காதவழி தூரத்திற்கு ஓடி விட்டது போல் ஒரு பிரமை தட்டியது.
“நீ என்ன இப்படிச் சொல்றே? கமலாதான் தன் இஷ்டத்துக்கு மாறாக நடக்கச் சம்மதிப்பாளா? இல்லை, அவள் அண்ணன் சங்கர்தான் அதற்கு இடங்கொடுப்பானா” என்று கேட்டான் மணி.
“மலை விழுங்கி மகாதேவனுக்குக் கதவி ஒரு அப்பளம். தாதுலிங்க முதலியாரிடம் எந்தப் பாச்சாவும் பலிக்காது. அவரை நமக்குத் தெரியாதா?” என்றான் முதலில் பேசிய மாணவன்.
“அது சரி, எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு? நடக்கிற காரியத்தைப் பேசுங்கள்!” என்றான் இன்னொரு மாணவன்.
“அது நடக்கிற காரியம் தான்!” என்று சொல்ல வேண்டுமென்று மணியின் ஆசையுள்ளம் துடித்தது. எனினும் அந்த வார்த்தையை இனந்தெரியாத பயமும் கலக்கமும் பிறக்க விடாமல் தடை செய்தன. மணி ஒன்றுமே பேசாது அவர்களோடு நடந்து வந்தான். அதற்குள் லோகநாயகி அம்மன் சந்நிதி வந்து விட்டதால் மணி மற்ற மாணவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கித் திரும்பினான்.
தன்னந் தனியனாக வரும் போதுதான் அவனது மனத்தை எண்ணற்ற கேள்விகளும் சந்தேகங்களும் வியூகமிட்டு வளைத்தன. அந்த மாணவர்கள் கமலாவைப் பற்றி ஏன் தான் பேசினார்களோ என்றிருந்தது அவனுக்கு. அதை விட, தான் ஏன் இந்தக் கலியாணப் பேச்சை எடுத்தோம் என்று நைந்தது அவன் உள்ளம். அவன் எவ்வளவு தான் சிந்தனையைத் திசைமாற்றி, அதை மறக்க முயன்றாலும், “எந்த லட்சாதிபதி வீட்டிலோ...?” என்ற அந்த வார்த்தைகள் அவன் மனதில் வல்லீட்டி போல் பாய்ந்து குத்தி, இல்லாத சந்தேகங்களை யெல்லாம் எழுப்பிக் கொண்டிருந்தன.
What's Your Reaction?






