சொந்த வீடு Vs வாடகை வீடு: நிதி ரீதியாக எது சிறந்த முடிவு?
சொந்த வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா இந்த குழப்பம் நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. குறிப்பாக நவீன இளைஞர்கள் மத்தியில் இந்த குழப்பம் அதிகரித்துள்ளது. சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் பலன்கள் என்ன? வாடகை வீட்டில் இருப்பதன் பலன்கள் என்ன? என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

பெரும்பாலானவர்கள் இதற்காக வீட்டு கடன் வாங்குகின்றனர் இவ்வாறு வீட்டுக் கடனை வாங்கி விட்டால் அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு இந்த கடனை செலுத்துவதற்காகவே வேலைக்கு சென்றாக வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் சொந்த வீடு வாங்குவது சிறந்ததா? அல்லது வாடகை வீட்டிலேயே தங்கி விடலாமா என்ற விவாதம் எழுவதை மறுக்க முடியாது. இதனை இரண்டு உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் தாங்கள் அந்த ஊரில் தான் செட்டிலாக போகிறோமா அல்லது அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு இந்த ஊரிலே தான் தொடர்ந்து தங்கி இருக்க போகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும். சொந்த வீடு வாங்குவது என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு. இது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஒரு வித அந்தஸ்தை நமக்கு தருகிறது. இருந்தாலும் இதற்காக நாம் வங்கியில் கடன் வாங்குகிறோம் எனும் போது நீண்ட காலத்திற்கு அந்த கடனை திரும்ப செலுத்தியாக வேண்டி இருக்கும். இதற்காக பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால் உங்கள் பெயரில் ஒரு சொத்து கிடைக்கிறது, அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டினுள் எந்தவிதமான வடிவமைப்பையும் நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இது உடனடியாக பணமாக்க முடியாத ஒரு சொத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.சொந்த வீடு என வரும்போது அதற்கான பராமரிப்பு செலவுகளும் உடன் வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
வாடகை வீடு என்றால் நம்முடைய வாழ்க்கை தரம் உயர உயர அதற்கு ஏற்ற வீட்டிற்கு நாம் மாறலாம. நம்முடைய வேலைக்கு ஏற்ப அல்லது பிள்ளைகளின் பள்ளிக்கு ஏற்ப அருகிலேயே இருக்கும் வீட்டிற்கு நாம் வாடகைக்கு சென்று விடலாம். ஆனால் நம்முடைய பெயரில் எந்த ஒரு சொத்தும் உருவாகி இருக்காது. ஆனால் அந்த பணத்தை முறையாக திட்டமிட்டு வேறு முதலீடு கருவிகளில் முதலீடு செய்து ஒரு கணிசமான தொகையை சேர்த்து அதை வைத்து வீடு வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவ்வாறு பணம் முதலீடு செய்து வீடு வாங்கும் திட்டம் இருந்தால் அதனை 30களில் இருப்பவர்கள் மேற்கொள்ளலாம். 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு இது சிறந்த முடிவை தராது. முதலீடு வளர்வதற்கு ஆண்டுகள் தேவை என்பதால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சொந்த வீடு: சொந்தமாக ஒரு வீட்டை வாங்குகிறோம் எனும் போது அது உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் ஒரு நிதி பாதுகாப்பையும் ஒரு சொத்துக்கு உங்களை உரிமையாளராகவும் மாற்றுகிறது. குறிப்பாக காலப்போக்கில் சொத்து மதிப்பு வளர்ச்சி அடையக்கூடிய பகுதியில் நாம் வீட்டையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பையோ வாங்கி இருந்தால் அடுத்த வரக்கூடிய ஆண்டுகளில் அதன் மதிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும்.
ஆனால் சொந்த வீடு எனும் போது அத்துடன் வீட்டு வரி , வீட்டு பராமரிப்பு செலவு என்பன உள்ளிட்ட கூடுதல் செலவுகளும் நமக்கு வருகிறது. ஒருவேளை நீங்கள் வீடு வாங்கி அதனை வாடகைக்கு விடும் யோசனை இருந்தால் உங்களுக்கு வாடகை வருமானமும் கூடுதலாக கிடைக்கும். வீடு வாங்குவதற்காக நீங்கள் உங்கள் கையில் இருந்து ஒரு பெரிய தொகையை வழங்க வேண்டி இருக்கும். பெரும்பாலானவர்கள் மொத்த தொகையையும் கொடுத்து சொந்தமாக வீட்டையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ வாங்கக்கூடிய சூழலில் இருக்க மாட்டார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை டவுன் பேமெண்டாக செலுத்திவிட்டு மீதமுள்ள தொகைக்கு நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோம். பெரும்பாலும் இதற்காக நாம் செலுத்தக்கூடிய ஈஎம்ஐ தொகை நம்முடைய வீட்டு வாடகை தொகை அல்லது வாடகை வருமான தொகையை விட அதிகமாக தான் இருக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சி இருக்கும் இடமாக பார்த்து வீடு வாங்குவது சிறந்தது என சொல்லப்படுகிறது.
மும்பை, பெங்களூரு போன்ற அதிக விலை கொண்ட நகரங்களில் பல கோடி ரூபாய்க்கு வீட்டினை வாங்குவதை விட இரண்டாம் நிலை நகரங்களில் சொந்தமாக வீடு வாங்குவது சிறந்த யோசனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதிகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சொத்தின் விலை பல மடங்கு உயரும். ஆனால் இந்த முறையில் உங்களின் பணம் வீடு என்ற ஒரு முதலீட்டிலேயே முடங்கிவிடும்
வாடகை வீடு: ஒருவேளை நீங்கள் வாடகை வீட்டிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தால் ,நீங்கள் உங்களுடைய வாழ்க்கை முறை மாறுதல்களுக்கு ஏற்ப வீட்டினை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளின் பள்ளி, உங்களின் வேலை உள்ளிட்டவற்றுக்கு ஏற்றவாறு நீங்கள் வீட்டினை நினைத்தபொழுது மாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு கணிசமான தொகையை ஒரு இடத்தில் முதலீடு செய்வது, ஈஎம்ஐ செலுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவை இருக்காது. உங்களுடைய சம்பளத் தொகையை வாடகை மற்ற பிற செலவினங்கள் போக பிற முதலீட்டு கருவிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம் . பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். நீண்ட கால அடிப்படையில் இவை உங்களுக்கு நல்ல லாபத்தை வழங்கும்.
நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது சொந்த வீடும் , சரி வாடகை வீடும் சரி ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் அவர்களுடைய முதலீட்டு இலக்குகள் ஆகியவற்றை பொறுத்து லாபம் வழங்கக்கூடியவையாகத்தான் இருக்கும் என்கின்றனர் இந்த துறையில் இருப்பவர்கள். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு கணிசமான தொகையை பன்முகத்தன்மை கொண்ட முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்திருப்பார்கள். அதுவே சொந்த வீடு வாங்குபவர்களுக்கு அவர்களுக்கு ஒரு மதிப்பு மிக்க ஒரு சொத்தின் உரிமையாளராக இருப்பார்கள்.
What's Your Reaction?






