உருளைக்கிழங்கு சிப்ஸை இனி கடையில் வாங்க வேண்டாம்; வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்
உருளைக்கிழங்கு சிப்ஸை இனி கடைகளில் 40 ரூபாய், 50 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த பதிவில் உள்ள செய்முறையை பின்பற்றி உருளைக்கிழங்கு சிப்ஸ் போட கற்றுக் கொள்ளுங்கள். வீட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்தால் சைட் டிஷ் பஞ்சம் வராது.

வெரைட்டி ரைஸ், பால் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என எண்ணற்ற உணவுகளின் சைட் டிஷ் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ். சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும் கருக் முருக்கென உள்ள உருளைக்கிழங்கு சிப்ஸின் சுவை தனித்துவமானது. சமையலில் கூட்டு வைக்கவில்லை என்றால் பரவாயில்லை உருளை சிப்ஸ் கொடுத்து அனுப்பினால் போதும் என நாம் நினைப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் 100 கிராம் உருளைக்கிழங்கு வாங்க கடைக்கு சென்று 35-40 ரூபாய் செலவிடுகிறோம். அதை வீட்டிலேயே செய்ய தெரிந்து கொண்டால் வேலை சுலபம். மிகப்பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு சிப்ஸ் வறுத்து எடுப்பது எல்லாம் வீட்டில் சாத்தியமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் 2-3 கிலோ உருளைக்கிழங்கு, வட்டமான கடாய் இருந்தாலே சிப்ஸ் போட்டு காற்று புகாத பாத்திரத்தில் வைத்து ஒரு வாரத்திற்கு கூட சாப்பிடலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அவை இரண்டுமே எளிதானவை.
Directions
1. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய தேவையானவை
- உருளைக்கிழங்கு
- உப்பு
- சிப்ஸ் கட்டர்
- கடலெண்ணெய்
- மிளகாய் பொடி
குறிப்பு : சிப்ஸ் கட்டர் என்பது வாழைக்காய் பஜ்ஜி போடுவதற்கு நாம் பயன்படுத்தும் பாத்திரம்.

2. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை 1
- இரண்டு கிலோ உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி தோல் சீவி விடுங்கள்.
- கொஞ்சம் பெரிய கடாயில் அரை லிட்டர் கடலெண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடைகளில் பார்ப்பது போல் சிப்ஸ் கட்டர் வைத்து உருளைக்கிழங்கை தேய்க்கவும்.
- சிப்ஸ் நன்றாக வறுபட நேரம் எடுக்கவும். நீங்கள் உள்ளே போடும் போது முட்டை முட்டையாக வரும். சிப்ஸ் வறுபட்டவுடன் எண்ணெயின் தன்மை அடங்கிவிடும்.
- வெளியே எடுத்து சூடு குறைந்தவுடன் ஒரு ஸ்பூன் நிறைய மிளகாய் பொடி அதில் முக்கால் வாசி அளவு உப்பு போட்டு குலுக்கவும்.
3. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை 2
- உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி தோல் சீவி விடுங்கள். அடுத்ததாக ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்குகளை கட்டர் வைத்து தேய்க்கவும்.
- அரை மணி நேரம் தண்ணீரில் உருளைக்கிழங்குகள் மூழ்கட்டும். அதன் பிறகு வெள்ளைத் துணி எடுத்து உருளைக்கிழங்குகளை போட்டு உலர்த்தவும்.
- இப்போது கடாயில் கடலெண்ணெய் சூடானதும் சிப்ஸை போட்டு வறுக்கவும். நீங்கள் காரம் தேவையில்லை என்றால் அரை டம்ளர் தண்ணீர் எடுத்து அரை ஸ்பூன் உப்பு போட்டு ஒவ்வொரு முறை சிப்ஸ் போட்டு எடுக்கும் போது எண்ணெயிலேயே அரை ஸ்பூன் உப்பு தண்ணீர் ஊற்றலாம்.
- சில சமயங்களில் உப்பு தண்ணீர் ஊற்றும் போது தெறிக்கும். கவனமாக இருங்கள்.
- சிப்ஸ் வறுத்த பிறகு 5 நிமிடம் கழித்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

What's Your Reaction?






