மோடி-யின் 36 மணிநேர அமெரிக்க பயணம்..
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி பாரிஸ் சென்றார்

நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டை தொடர்ந்து, அன்று இரவு பாரிஸில் இருந்து துறைமுக நகரான மார்சேவுக்கு சென்றார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி ஏஐ ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப்ரவரி 12) அமெரிக்கா சென்றடைந்தார். டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு இருவரும் முதல் முறையாக சந்திக்கவுள்ளனர். உலக நாடுகள் மீதான வரி விதிப்பை ட்ரம்ப் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னதாக, தனி விமானம் மூலம் வாஷிங்டனை அடைந்தார். அங்கு அவருக்கு அமெரிக்க உயரதிகாரிகள் நேரில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, விமான நிலைய வளாகத்தில் குவிந்திருந்த இந்திய வம்சாவளியினருடன் கைக்குலுக்கி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதனிடையே, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அருகே உள்ள, அதிபர் மாளிகை விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸில் பிரதமர் மோடி தங்கி உள்ளார்.
வாஷிங்டனை அடைந்த பிறகு பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு நான் பாடுபடுவேன். நான் இதற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். தனது 36 மணி நேர பயணத்தின் போது, மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
பிரதமர் மோடியின் 36 மணிநேர அமெரிக்க பயண திட்டங்கள்: இன்று மாலை 4 மணிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் சீனாவையும் தீவிர இஸ்லாத்தையும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாகக் கருதி, முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
டிரம்ப் 47 வது அதிபராக பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை சந்திக்கும் நான்காவது நாட்டுத் தலைவராக பிரதமர் மோடி இருப்பார். முன்னதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதலில் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார், அதைத் தொடர்ந்து ஜப்பானின் ஷிகெரு இஷிபாவும் வருகை தந்தார். ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா செவ்வாயன்று அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். இந்தியா-அமெரிக்க உறவுகளில் வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் எரிசக்தி ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக உருவெடுத்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






