OPS: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலா?- அரசு போட்ட முக்கிய உத்தரவு!
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அணுமதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.04.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது,
எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
* ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை.
* கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics
* பிரத்திக் தாயள், இ.ஆ.ப., துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர்.
9 மாத அவகாசம்
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குழு கண் துடைப்புக்கா?
எனினும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கையை அமைதிப்படுத்தவே இந்தக் குழு கண் துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த காலங்களில் இதுபோன்ற குழுக்கள் ஏராளமாக அமைக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றின் பரிந்துரைகள் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்றும் அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?






