2025ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு குறித்த விவரங்கள் வெளியாயின! - NEET UG 2025
2025ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதம் விண்ணபிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கோட்டா(ராஜஸ்தான்): 2025ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதம் விண்ணபிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வுக்கான neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாகத்தான் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதி மேற்கொள்ளப்படும். முக்கியமான ஆவணங்கள் இந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும் இந்த இணையதளத்தை அணுக வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியத்தால் இறுதி செய்யப்பட்ட 2025ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டங்களை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், நர்சிங் மற்றும் வாழ்க்கை அறிவியல் உட்பட.இளநிலை மருத்துவப்படிப்புகளில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 2025ஆம் ஆண்டின் இளநிலை நீட்தேர்வு 2025ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான வசதி வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும்.
நீட் தேர்வு குறித்த அவ்வப்போதைய தகவல்களுக்கு neet.nta.nic.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்க்க வேண்டும்,"என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் இளநிலை நீட் தேர்வினை நாடு முழுவதும் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வினை நாடு முழவதும் 24 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தகுதிப்பெற்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் 2024ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. எனவே இந்த ஆண்டு சர்ச்சைகளுக்கு இடமின்றி தேர்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?






