திரு.லால்பகதூர் சாஸ்திரி
Mr.Lal Bakadhur Sasthiri Biography

திரு.லால்பகதூர் சாஸ்திரி
ஜூன் 9, 1964 - ஜனவரி 11, 1966 | காங்கிரஸ்
திரு.லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள முகல்சராய் சிறிய ரயில்வே நகரத்தில் 1904, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர் தந்தை திரு.லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது மறைந்தார். அப்போது இருபது வயதே ஆன அவருடைய தாயார் தனது 3 குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டிற்குச் சென்று குடியேறினார். லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வறுமையையும் மீறி அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் நானா (சின்ன குழந்தை) என்றே அவர் அழைக்கப்பட்டார். கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்றார்.
அவர் வளர வளர அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய இளவரசர்களுக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மா காந்தியின் செயல் இவரை மிகவும் கவர்ந்தது. அப்போது அவரின் வயது 11 ஆகும். ஆனால், அந்த செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். இந்த முடிவு அவர் தாயாரின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதை ஒரு அழிக்கும் செயலாகக் கருதிய அவரது குடும்பத்தார் அவருக்கு அறிவுறுத்த முடியவில்லை. ஆனால், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு நெருக்கமான அனைவருக்கும் இது தெரியும். ஒருமுறை அவர் முடிவு செய்தால் பிறகு மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் அவருடைய சாதுவான தோற்றத்திற்குள் ஒரு உறுதியான பாறை இருக்கிறது என்றும் தெரியும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார். அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது.
1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி லலிதா தேவி, மிர்சாபூர் நகரத்தைச் சார்ந்தவர். அவருடைய திருமணம் முழு பாரம்பரியத்துடன் நடைபெற்றாலும் ஒரு விசயத்தில் மட்டும் வித்தியாசமாகவே இருந்தது. சுழல் சக்கரமும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளையாக அவர் வேறு எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார். திரு.லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார். 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பஹதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். உத்தரபிரதேசத்தில் கடின உழைப்புக்கும், திறமைக்கும் லால்பகதூர் சாஸ்திரி என்பது ஒரு மறுபெயராக இருந்தது. 1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். அவருடைய வளர்ச்சி திடமானதாக இருந்தது. ஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பனவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். இதுபோன்று முன் எப்போதும் நடைபெறாதச் சம்பவத்தை நாடாளுமன்றமும், நாடும் அவரை வெகுவாக புகழந்தது. அப்போது பிரதமராக இருந்த பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் குறித்து பேசுகையில், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையும் உயர்ந்த லட்சியங்களையும் புகழ்ந்து பேசினார். இந்த சம்பவத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி எந்தவகையிலும் பொறுப்பில்லை என்றாலும் அரசியல் சட்ட அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக நான் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். ரயில்வே விபத்து குறித்த நீண்ட விவாதத்திற்கு பதில் அளித்த லால்பகதூர் சாஸ்திரி, என்னுடைய சிறிய உருவத்தைப்பார்த்தும், அமைதியாக பேசுவதை வைத்தும் மக்கள் என்னால் உறுதியாக செயல்பட முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உருவ அமைப்பில் நான் வலிமையானவனாக இல்லாதபோதும், நான் மனதளவில் உறுதியானவன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய அமைச்சரவை செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் செயல்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது. லால் பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நேர்மைக்காகவும் சிறந்த ஆற்றலுக்காகவும் மக்களால் அவர் நன்கு அறியப்பட்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார். தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். மகாத்மா காந்தியின் அரசியல் பாடம் இவரை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஆசிரியரை நினைவு கூறும் வகையில் ‘கடின உழைப்பு பிராத்தனைக்கு சமம்’ என்று அவர் ஒரு முறை தெரிவித்தார். மகாத்மா காந்தி வழியில், லால் பகதூர் சாஸ்திரியும் இந்திய கலாச்சாரத்தைச் சிறப்பாக பிரதிபலித்தார்.
What's Your Reaction?






