காதலர் தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
Kadhalar Dhinam History in tamil

காதலர் தினத்தின் வரலாறு என்ன
தெரியுமா? இது உங்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அன்பு மற்றும் பாசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். ஆனால் உலகெங்கிலும் பரவலாகக் கொண்டாடப்படும் இந்த நாளின் வரலாறு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? சரி வாருங்கள் இந்த பதிவில் காதலர் தினத்தின் வரலாற்றை கொஞ்சம் அலசி ஆராய்வோம்.
ரோமில் தொடக்கம்: காதலர் தினத்தின் தோற்றம் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் ஆட்சியின் போது பண்டைய கால ரோமிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. கிபி 3ம் நூற்றாண்டில் திருமணமாகாத வீரர்கள் சிறந்த போர்வீரர்களாக உருவாகிறார்கள் என நம்பி, இரண்டாம் கிளாடியஸ் இளைய போர் வீரர்கள் திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்தார். இருப்பினும் ‘Valentine’ என்ற ரோமானிய பாதிரியார், இந்த உத்தரவை மீறி ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார்.
ஆனால் அவரது செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு முன்பாக ஜெய்லரின் மகளைக் காதலித்து, தான் விடைபெறப் போவதை கடிதத்தில் எழுதி, “From Your Valentine” எனக் கையொப்பமிட்டு அனுப்பினார். அந்த அன்பின் வெளிப்பாடு, இன்றளவும் காதலர் தினத்திற்கு கொடுக்கப்படும் கிரீட்டிங் கார்டு வாயிலாகப் பின்பற்றப்படுகிறது.
கிறிஸ்துவத்தின் பங்களிப்பு: ஒரு கட்டத்தில் ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவ மதம் பரவியதால், பிப்ரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்பட்ட ‘லுபர்காலியா’ எனப்படும் ஒருவகைத் திருவிழா, படிப்படியாக கிறிஸ்தவ பண்டிகை நாளாக மாற்றப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டில் போப் ஒன்றாம் கொலாஷியஸ், புனித வாலன்டைனின் தியாகத்தைப் போற்றும் வகையில், பிப்ரவரி 14-ஆம் தேதியை புனித காதலர் தினமாக அறிவித்தார். காலப்போக்கில் இந்த நாள் காதல் தொடர்புடையதாக மாறி, அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதற்கு பிரபலமடைந்தது.
Courtly Love: இடைக்காலத்தில் Courtly Love என்ற கருத்து ஐரோப்பாவில் தோன்றியது. ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் தங்களின் விருப்பத்தை தைரியமாக வெளிப்படுத்தும் ஒரு உன்னத பாரம்பரியம் இது. இந்த நாளில் ஆண்கள் அவர்கள் விரும்பும் பெண்களுக்கு மலர்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட காதல் கவிதைகளை எழுதி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இது அன்பைப் பரிமாறிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக மாறியது.
காதலர் தின அட்டைகளின் எழுச்சி: 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் காதலர் தின அட்டைகளைப் பரிமாறிக் கொள்ளும் பாரம்பரியம் வேகம் பெற்றது. காதல் செய்திகள் மற்றும் வசனங்களுடன் Valentine’s என எழுதப்பட்ட அட்டைகளை மக்கள் பரிமாறிக் கொண்டனர். இந்த அட்டைகள் தொடக்க காலத்தில் ரிப்பன்கள் மற்றும் சரிகைகளால் அலங்கரிக்கப்பட்டது. பின்னாளில் அச்சடிக்கப்பட்ட அட்டைகளின் வருகையால் பெருமளவில் இந்த விஷயம் பிரபலமாகி, ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பல நூறு ஆண்டுகளாக காதலர் தினம் தொடர்ந்து \
பரிணாம வளர்ச்சி அடைந்து, 19ஆம் நூற்றாண்டில், வாழ்த்து அட்டைகளை அனுப்பும் நடைமுறை அமெரிக்காவிலும் பரவியது. 1840களில் ‘Mother Of American Valentine’ என்று அழைக்கப்படும் எஸ்தர் ஹவ்லாந்து, அதிகப்படியான காதலர்களை ஒன்று சேர்த்து வைத்தது மூலமாக, பிப்ரவரி 14ல் சாக்லேட்டுகள், பூக்கள் மற்றும் பரிசுகள் பெரும் வணிகமயமாக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு, கலாச்சார எல்லைகளைக் கடந்து உலகளாவிய அன்பின் கொண்டாட்டமாக மாறியுள்ளது. எனவே இந்த பிப்ரவரி 14ல் உங்கள் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்தவர்களுடன், அற்புதமான நினைவுகளை உருவாக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!
What's Your Reaction?






