கொளுத்துற வெயிலுக்கு 1/2 மூடி தேங்காய் வெச்சு.. ஜில்லுன்னு ஒருடைம் இத செஞ்சு குடிச்சு பாருங்க..

Summer Special Coconut Milk Drink Recipe In Tamil: தற்போது வெயில் சுட்டெரிக்கும் அளவில் கடுமையாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, தாகம் அதிகம் எடுக்கத் தொடங்கும். அப்போது நாம் பெரும்பாலும் சர்பத், இளநீர், ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடுவோம்

Mar 27, 2025 - 22:20
 0  0

1. தேங்காய் பால் பானம்

ஆனால் இவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் தேங்காய் இருந்தால், அதைக் கொண்டு இன்னும் சுவையான மற்றும் ஏராளமான நன்மைகளை வழங்கும் ஒரு அற்புதமான பானத்தை செய்து குடிக்கலாம். முக்கியமாக இந்த பானத்தில் தேங்காய் பால் மட்டுமின்றி, நட்ஸ், பேரிச்சம் பழம், சப்ஜா விதைகள் போன்றவை சேர்த்து செய்வதால் மிகவும் சத்தானது


இந்த பானத்தைக் குடிப்பதால், வயிற்றுப்புண் சரியாவதோடு, உடல் சூடும் தணியும், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இந்த தேங்காய் பால் பானத்தை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து குடித்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுவும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுப்பது இன்னமும் நல்லது. உங்களுக்கு சம்மர் ஸ்பெஷல் தேங்காய் பால் பானத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த தேங்காய் பால் பானத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2. தேவையான பொருட்கள்:

*தேங்காய் - 1/2 மூடி

* தேங்காய் நீர் - சிறிது

* முந்திரி - 5

* பிஸ்தா - 10

* பாதாம் - 5

* உலர் திராட்சை - 10

 * பேரிச்சம் பழம் - 3

* சப்ஜா விதை - 1 டீஸ்பூன்

* சர்க்கரை - சுவைக்கேற்ப

* ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

 * தண்ணீர் - தேவையான அளவு


3. செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை எடுத்து, நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 * அதேப் போல் மற்றொரு கிண்ணத்தில் உலர் திராட்சை மற்றும் பேரிச்சம் பழத்தை நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் சப்ஜா விதைகளை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, நீரை ஊற்றி ஊற 1/2 மணிநேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரை மூடி தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் பேரிச்சம் பழத்தை சேர்த்து, தேங்காய் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் பெரிய ஜாரில் தேங்காய் துண்டுகளை சேர்த்து முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

 * பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 * பிறகு அரைத்த தேங்காயை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி பயன்படுத்தி ஒருமுறை வடிகட்டி, தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மீண்டும் அதே தேங்காயை ஜாரில் போட்டு, 1 டம்ளர் நீரை ஊற்றி ஒருமுறை அரைத்து, பின் அதையும் வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த தேங்காய் பாலில் அரைத்த நட்ஸ் விழுதை சேர்த்து, அத்துடன் ஊற வைத்த சப்ஜா விதைகளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் வேண்டுமானால், சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

* உடனே குடிக்க வேண்டுமானால், ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், தயாரித்ததை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, குளிர வைத்து பிறகு குடிக்கலாம்.


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.