மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் செயலி.. 14 வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Heart Attack Detector | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியை வைத்து பயணிகளிடம் சோதனை செய்ததில் வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் அனத்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் 2010 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அவர் அங்கேயே வசித்து வந்துள்ளார். இவருக்கு 14 வயதில் சித்தார்த் என்ற மகன் உள்ளார். அவர் மாரடைப்பை கண்டுபிடிக்கும் மொபைல் செயலி (Mobile App) ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், மகேஷ் தனது மகனின் செயலியை அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை செய்துள்ளார். அப்போது மாரடைப்பு முன்கூட்டியே கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பை கண்டுபிடிக்கும் செயலியை உருவாக்கிய சிறுவன்
இந்த நிலையில், தனது சொந்த ஊருக்கு மகனை அழைத்து வந்த மகேஷ் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இந்த செயலியை சோதனை செய்து காட்ட விரும்பியுள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிறுவன் சித்தார்த்தின் செயலி சோதனை செய்யப்பட்டுள்ளது. சிர்கடியன் ஏஐ (Circadian AI)
என்னும் இந்த செயலி ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பை பதிவு செய்து, ஆரம்பகட்ட இதய நோய்களை துல்லியமாக கண்டறிந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் சுமார் 700 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது.
முதலமைச்சர் துணை, முதலமைச்சர் பாராட்டு
இதனை அடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் உதவியுடன் சிறுவன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது அவர் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் தனது மொபைல் செயலி குறித்து விளக்கியுள்ளார். அப்போது ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் உடன் இருந்துள்ளார். அவர்கள் சிறுவனின் அசத்தலான கண்டுபிடிப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு சிறுவனை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






