திரு. மாணிக்கம் திரைவிமர்சனம்
Thiru Manikkam Thiraivimarsanam
திரு. மாணிக்கம் திரைவிமர்சனம்
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் திரு. மாணிக்கம். இப்படத்தில் பாரதிராஜா, வடிவுக்கரசி, நாசர், அனன்யா, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா என நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யதார்த்த கதையில் வெளிவந்துள்ள திரு. மாணிக்கம் படம் எப்படி இருக்கிறது என்பது விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
மனைவி, இரண்டு மகள்கள் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி (மாணிக்கம்), கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளார். குடும்ப கஷ்டம், மகளாக மருத்துவ செலவு, கடன் பிரச்சனை என பல கஷ்டங்கள் மாணிக்கத்தை சுற்றி உள்ளது. ஆனாலும் கூட அவர் அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்து நேர்மையுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் சமுத்திரக்கனியின் லாட்டரி சீட்டு கடைக்கு வருகிறார் பாரதிராஜா. தன்னுடைய குடும்ப கஷ்டத்தை தீர்க்க ஒரே வழி லாட்டரி சீட்டு தான், அதன்மூலம் மனைவிக்கு மருத்துவ செலவு செய்து விடலாம், மகளுக்கு 10 பவுன் நகை போட்டு, அவளுடைய புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடலாம் என நினைத்து, சமுத்திரக்கனியிடம் இருந்து லாட்டரி சீட்டு வாங்குகிறார்.
ஆனால், பாரதிராஜாவிடம் இருந்த காசு துலைந்துபோக, இந்த லாட்டரி சீட்டை எடுத்துவையுங்கள், நாளை காசு கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என பாரதிராஜா கூறுகிறார். அதன்படியே, அந்த லாட்டரி சீட்டை சமுத்திரக்கனி எடுத்துவைக்கிறார். மறுநாள், பாரதிராஜா எடுத்த வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு ரூ. 1.5 கோடி லாட்டரி விழுந்துவிட்டது.
இந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிடம் சேர்த்துவிட வேண்டும் என சமுத்திரக்கனி கிளம்புகிறார். அந்த நேரத்தில் இந்த விஷயத்தை அறியும் சமுத்திரக்கனியின் மனைவி, மாமனார், மற்ற உறவுகள் அனைவரும், அந்த லாட்டரியை நாமே எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர்.
ஆனால், நான் அந்த பெரியவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன், இந்த லாட்டரி சீட்டு அவருக்கு தான் என முடிவு செய்து, நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து கிளம்புகிறார். இதன்பின் என்ன நடந்தது? அவர் சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன? சமுத்திரக்கனியின் இந்த நேர்மைக்கு என்ன காரணம்? நேர்மையாக இருந்தால் என்ன நடக்கும்? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் நந்தா பெரியசாமி எடுத்துக்கொண்ட கதைக்களமும், அதனை திரைக்கதையில் வடிவமைத்த விதமும் சிறப்பாக இருந்தது. எந்த ஒரு காட்சியும் தொய்வாக இல்லை. அதுவே படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
பணத்திற்காக மனிதர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள், அதை அடைய என்னவெல்லாம் செய்வார்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை அழகாக காட்டியுள்ளார்.
அதே போல் பணத்தை விட நேர்மையும், மனித நேயமும் தான் முக்கியம், அதை ஒருவன் செய்து விட்டால், பணம், புகழ் அவனை தேடி வரும் என காட்டிய விதம் பாராட்டுக்குரியது.
சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம், அவருடைய பேக் ஸ்டோரி மனதை தொடுகிறது. லாட்டரி சீட்டை எப்படியாவது, அந்த பெரியவரிடம் சேர்த்துவிட வேண்டும் என போராடிய சமுத்திரக்கனி நடிப்பு வேற லெவல். அதற்கு தனி பாராட்டுக்கள்.
எமோஷனல் காட்சிகள் படத்திற்கு பலம். அதே போல் எல்லா இடமும் எமோஷனலாக இருந்துவிட கூடாது என்பதற்காக, நகைச்சுவைக்காக வந்த தம்பி ராமையாவின் கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருந்தது.
பாரதிராஜா, நாசர், அனன்யா நடிப்பு சிறப்பு. மற்ற அனைவரின் கதாபாத்திரமும் திரைக்கதையோடு ஒன்றிப் போகிறது. பாடல்களை விட பின்னணி இசை பிரமாதம். படத்தின் முக்கிய தூண்கள் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு.
ப்ளஸ் பாயிண்ட்
சமுத்திரக்கனி நடிப்பு
நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு
எமோஷனல் காட்சிகள்
திரைக்கதை
ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றும் இல்லை
மொத்தத்தில் திரு. மாணிக்கம் மனதில் நின்றார்.
What's Your Reaction?