ரூ. 5,000 இருந்தாலே போதும் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்;டெரகோட்டா அணிகலன்
1. டெரகோட்டா அணிகலன்
டெரகோட்டா அணிகலன்களையும் நாம் பயன்படுத்தி இருக்கிறோம். இக்கலை வடிவம் தற்போதும் உயிர்ப்புடன் இருக்கக் காரணம், அதன் உறுதித்தன்மையும், அழகியல் வெளிப்பாடும்தான். இடைக்காலத்தில் தான், தங்கத்தில் அணிகலன்கள் செய்யப்பட்டன. தற்போதும் தங்க அணிகலன்களுக்கு மதிப்பு இருந்தாலும் எல்லோராலும் அணிய முடிவதில்லை. ஆனால், குறைந்த விலையில், விதவிதமான, வித்தியாசமான வடிவங்களில் டிசைன்கள் உருவாக்கி, பல வண்ணங்கள் சேர்த்து, புதுமையான அணிகலன்களை, டெரகோட்டாவில் மட்டுமே உருவாக்க முடியும்.
2. லட்சத்தில் வருமானம்
களிமண்ணை தேவையான வடிவத்துக்கான அச்சில் சேர்த்து உருவம் உருவாக்க வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே நான்கு நாட்கள் வரை காய வைத்து, அதன் உறுதித்தன்மையை அதிகரிக்க நெருப்பில் வாட்டி, விரும்பிய வண்ணங்கள் கொடுத்து, அணிகலன்கள் உருவாக்கப்படும்.
ஐந்து நாட்களில் ஒரு டெரகோட்டா நகையை உருவாக்கிடலாம். இதற்கான களிமண், ஒரு கிலோ 100 ரூபாய் தான். உருவங்கள் செதுக்கும் ஊசி, நெருப்பில் வாட்டும் கருவி வாங்க என மொத்தம், 5,000 ரூபாய் முதலீடு இருந்தால், வீட்டிலேயே இத்தொழில் துவங்கலாம். கலை மீதான ஆர்வம், தனித்துவம், விடாமுயற்சி இருந்தால், இத்துறையில் குறுகிய காலத்திலே லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.
டெரகோட்டா நகை உருவாக்கத்துக்கு என, பல இடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நான் இதுவரை, 350 பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறேன்.
தவிர, 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கு சென்று இளம் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், டெரகோட்டா நகை உருவாக்கும் முறை குறித்து பயிற்சி அளித்திருக்கிறேன்.
ஒரு மாதம் பயிற்சி பெற்றால், இதுபோன்ற நகைகள் உருவாக்க துவங்கலாம். ஆனால், இத்துறையில் தனித்துவம் பெற, உங்களின் தேடல், ஆர்வம் மிக முக்கியம். யுனிக்கலெக் ஷன்கள் நவீனத்துக்கு ஏற்ப டிசைன்கள், வித்தியாசமான கலர் காமினேஷன்கள், பேட்டன்கள் உருவாக்க வேண்டும். உருவங்கள் உருவாக்குவதாக இருந்தால், தத்ரூபமாக கொண்டுவர வேண்டும். வீட்டில் இருந்தபடியே நகை உருவாக்கி, ஆன்லைனில் விற்கலாம்.
3. அடையாள அட்டை
டெரகோட்டா நகைகள், கைவினை தொழிலின் கீழ் வருகிறது. இதற்கு, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு பயிற்சிப் பட்டறைகள், சந்தைப்படுத்துதல், தொழில் துவங்குவதற்கு நிதி ஒதுக்குகிறது. மாவட்டம் வாரியாக உள்ள பூம்புகார் விற்பனை நிலையங்களில், சிறந்த கைவினைப்பொருட்களை விற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில், கைவினைஞர் அடையாள அட்டை (Artisan Identity Card) வழங்கப்படுகிறது. இதற்கு, http://handicrafts.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த அடையாள அட்டை வைத்திருப்போர், நாடு முழுக்க, அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து விதமான கண்காட்சிகளிலும், இலவசமாக தங்களின் படைப்புகளை விற்க அரங்கு வழங்கப்படுகிறது. தொழிலை விரிவாக்கவும், வங்கிகளில் கடனுதவி பெறவும், இந்த அடையாள அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது.
4. சிவப்பு கம்பளம்
எந்த தொழிலில் ஈடுபடுவதாக இருந்தாலும், அத்துறை சார்ந்த தகவல்களை 'அப்டேட்' செய்து கொண்டே இருந்தால் தான், போட்டிகளை சமாளிக்க முடியும். கைவினைப் பொருட்களை துவக்கத்தில், ஆன்லைனில் விற்பதன் வாயிலாக செலவுகளை குறைக்கலாம். உங்கள் பிராண்டுக்கு முதலில் பெயரிடுங்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைப்பக்கங்களில், பிரத்யேக பக்கம் உருவாக்கி, படைப்புகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வாடிக்கையாளர்களை சென்றடையலாம்.
கொரோனா காலத்தில் தான், இத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டேன். துவக்கத்தில், ஒரு மாதம் 5,000 ரூபாய் வருமானமாக கிடைத்தது. தற்போது, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என்னிடம், 14 பேர் பணிபுரிகின்றனர்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக தொழிலை விரிவுபடுத்துவது எளிது. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும், நொடியில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இல்லத்தரசிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் இத்துறைக்கு வருவது, கலையின் வளர்ச்சிக்கு உதவும். நீண்டநெடிய வரலாறு கொண்ட டெரகோட்டா கலை, இன்னும் பல நுாறு ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்க வேண்டும். நுட்பமான கலை உணர்வு, ஆர்வம், ஈடுபாடு உள்ளவர்களுக்கு இத்துறை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
What's Your Reaction?