பாரம்பரிய முறையில் காய்கறி பொங்கல் குழம்பு

Pongal kulampu Recipe in tamil

Jan 5, 2025 - 18:44
 0  12
பாரம்பரிய முறையில் காய்கறி பொங்கல் குழம்பு

பாரம்பரிய முறையில் காய்கறி

 பொங்கல் குழம்பு  - பல காய்

குழம்பு செய்வது எப்படி

பொங்கல் நாளன்று அந்த சீசனில் விளையக்கூடிய 21 வகையான நாட்டுக் காய்கறிகளை வைத்து புளித்தண்ணீர், மசாலா சேர்த்து தேங்காய் அரைத்துவிட்டு பாரம்பரிய முறையில் ஓரு கூட்டு குழம்பு செய்வார்கள். இது தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு வகைகளில் இந்த குழம்பு செய்வார். சில இடங்களில் காரக்குழம்பு போலவும் சில பகுதிகளில் பருப்பு சேர்த்து சாம்பாராகவும் செயயலாம். 21 காய்கறிகள் கிடைக்கவில்லை என்றால் 7 காய், 9 காய், என கிடைக்கும் நாட்டுக் காய்களில் ஒற்றைப் படையில் போட்டு இந்த குழம்பை செய்வார்கள்.

 

பாரம்பரிய முறையில் 21 காய்கறி பொங்கல் குழம்பு - கதம்ப குழம்பு - மரக்கறி கூட்டு - பல காய் குழம்பு செய்வது எப்படி

பொங்கல் படையலுக்காக மிளகு, சீரகம் எதுவும் சேர்க்காமல் செய்யப்படும் வெண் பொங்கலுக்கு இந்த பல காய் குழம்பு செய்து படையல் போடுவார்கள். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவை வேற லெவல்ல இருக்கும்.

வாங்க ஊரே மணக்கும் பல காய்கறி பொங்கல் கதம்ப குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பாரம்பரிய முறையில் பல காய் குழம்பு - கதம்ப சாம்பார் செய்வது எப்படி?

 


தேவையான பொருள்கள்



  • சௌ சௌ - 1
  • கத்தரிக்காய் - 4
  • முருங்கைக்காய் - 1
  • பீர்க்கங்காய் - பாதி
  • அவரைக்காய் - 100 கிராம்
  • கொத்தவரங்காய் - 100 கிராம்
  • மாங்காய் - சிறிய சைஸ்
  • மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப்
  • வெள்ளை பூசணிக்காய் - ஒரு கப்
  • சேனைக்கிழங்கு - ஒரு கப்
  • சேப்பங்கிழங்கு - ஒரு கப்
  • வாழைக்காய் - 1
  • உருளைக்கிழங்கு - ஒரு கப்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
  • கருணைக்கிழங்கு - 3
  • முள்ளங்கி - 1
  • கேரட் - 1
  • பீன்ஸ் - அரை கப்
  • நூல்கோல் - 1
  • பச்சை மிளகாய் - 4
  • பெரிய வெங்காயம் - 1
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • தக்காளி - 4
  • பூண்டு - 20 பல்
  • பச்சை மொச்சை பயறு - 1 கப்
  • பச்சை வேர்க்கடலை - அரை கப்
  • துவரம்பருப்பு - கால் கிலோ
  • புளி - பெரிய எலுமிச்சை சைஸ்
  • கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

மசாலா அரைக்க



  • காய்ந்த மிளகாய் - 10-15
  • தனியா - 5 ஸ்பூன்
  • மிளகு - 10
  • தேங்காய் - அரை மூடி
  • சீரகம் - அரை ஸ்பூன்
  • வெந்தயம் அரை ஸ்பூன்
  • துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
  • அரிசி - 1 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்

தாளிக்க



  • தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய்
  • கடுகு - அரை ஸ்பூன்
  • வெந்தயம் - கால் ஸ்பூன்
  • சீரகம் - கால் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • சிறிய வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை


முதலில் துவரம்பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.


வாழைக்காய், சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கேரட். முள்ளங்கி, நூல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய், சௌசௌ என தோல் சீவ வேண்டிய காய்கறிகளை தோல் சீவி கழுவிக் கொள்ளுங்கள்.


எல்லா காய்கறிகளையும் உங்களுக்கு பிடித்த வகையில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சற்று பெரிய சைஸில் நறுக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நிறைய காய்கறிகள் குழைந்து போய்விடும்.


ஒரு குக்கரில் ஊற வைத்த பருப்புடன் பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக 3 விசில் விட்டு வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கி வைத்த எல்லா நாட்டுக் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். (மொச்சைப்பயறு, வேர்க்கடலை சேர்க்கக் கூடாது)


அதில் சிறிது மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவிடுங்கள்.


காய்கறிகள் வேகும் நேரத்தில் புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் அரை பதத்துக்கு வெந்ததும் இந்த புளித் தண்ணீரை ஊற்றி வேக விட வேண்டும். அதோடு மொச்சைப்பயறு, வேர்க்கடலையையும் சேர்த்து கலந்து விடுங்கள். புளிப்பு சுவை சற்று கூடுதலாக இருந்தால் சுவையாக இருக்கும்.


ஒரு வெறும் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேங்காயைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.


காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் இந்த தேங்காய் கலவையைச் சேர்த்து கலந்து விட்டு அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.


வேகவைத்த பருப்பை நன்றாகக் கடைந்து பருப்பு கலவையுடன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். கடைசியாக ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்நததும் அதில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அதோடு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தாளித்து குழம்பில் கொட்டி விட்டால் கதம்ப சாம்பார் தயார்.

குறிப்பு நிறைய பேர் பருப்பு சேர்க்காமல் குழம்பாக வைப்பார்கள் . சிலர் பருப்பு சேர்த்து சாம்பாராக செய்வார்கள். பருப்பு சேர்க்காமலும் காரக் குழம்பாக செய்து அதை பொங்கலன்று வைக்கப்படும் வெண் பொங்கலோடு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow