முருங்கை கீரை சூப்பில் இருக்கு சூப்பர் நன்மைகள்!
Murungai Keerai soup and benefits in tamil
முருங்கை கீரை சூப்பில் இருக்கு சூப்பர் நன்மைகள்!
அன்றைய காலத்தில் கிராமம் முதற்கொண்டு நகரம் வரை அனைத்து வீடுகளிலும் முருங்கை மரம் வளர்ப்பதை பார்த்திருப்போம். கல்யாண சமையலில் இருந்து, வீட்டு சமையல் வரை முருங்கைக் காய்களின் மணம் கொண்ட சாம்பார் நிச்சயம் இருக்கும். காரணம் இன்றி மற்ற கீரைகளை விட, முருங்கை மரத்தை அதிக அளவில் வளர்க்கவில்லை நமது முன்னோர்கள்.
முருங்கையின் இலைகளில் இருந்து அதன் பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடி பாகம் வரை அனைத்தும் மருத்துவப் பொக்கிஷங்கள் எனத் தெரிந்தே அதை நமக்கு எளிதாகக் கிடைக்கும்படி செய்து அன்றாட உணவில் சேர்த்து நலம் பெற உதவியுள்ளனர்.
முருங்கையில் அப்படி என்ன சத்துக்கள் உள்ளன?
அதிக அளவிலான இரும்புச் சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் இப்படி ஏகப்பட்ட சத்துக்களை தன்னுள்ளே கொண்டதுதான் முருங்கை இலைகள். மற்றவற்றை பயன்படுத்தவில்லை எனினும் முருங்கை இலையின் சூப்பை வைத்துக் குடித்தால் நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
சூப் எப்படி செய்வது?
இளம் முருங்கைக்கீரையை நன்கு ஆய்ந்து 1க்கு 2 பங்கு நீர் விட்டு (அரிசி கழுவிய நீர் இன்னும் நலம்) கொதித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சீரகம், மிளகு சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் 20 நிமிடம் போல அடுப்பில் வைத்து முருங்கை இலைகள் வெந்து ஒன்றரை பங்காக நீர் சுண்டியதும் அதை நன்கு மசித்து வடிகட்டியில் வடித்து அந்த நீரை அருந்துவதே முருங்கைக்கீரை சூப். இதில் அவரவர் ருசிக்கேற்ப இஞ்சி, பூண்டு, காரம் போன்றவற்றை சேர்த்துப் பருகலாம்.
முருங்கை சூப்பில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா?
நலம் தரும் ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைய உள்ளதால் இது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தவிர்க்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச் செய்து நோய் பாதிப்புகளை வர விடாமல் தடுக்கிறது. மெட்டபாலிசத்தைத் தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த சூப் இது. கொழுப்பு அளவைக் குறைப்பதில் சிறந்த பங்காற்றுகிறது. தொண்டை வலி, சளி பாதிப்பு, செரிமானமின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்து இது.
முருங்கை இலையில் அதிகம் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் நீரிழிவு மற்றும் சரும பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. குறிப்பாக முருங்கைக்கீரை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை தடுக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது. முக்கியமாக, இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் உகந்ததாக உள்ளது. முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
இவை மட்டுமின்றி, இன்னும் ஏராளமான பலன்களைத் தரும் முருங்கை சூப்பை தற்போது நோய் தொற்று அதிகம் பரவும் காலத்தில் தினமும் எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், வாரத்தில் இரண்டு நாளாவது கட்டாயம் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து தர வேண்டும். குழந்தைகள் மற்றும் பிற உடல் பாதிப்புகளுக்காக சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவர் ஆலோசனையின் பேரில் முருங்கை சூப் அருந்துவது நலம்.
What's Your Reaction?