Manjolai Tourism: மினி ஊட்டியான மாஞ்சோலைக்கு ஒரு ட்ரிப் போலாமா?
காரில் செல்ல அனுமதி பெற்றுள்ள சுற்றுலாப்பயணிகள் மாஞ்சோலை செல்லும் வழியில் மணி முத்தாறு அணை, அருவி போன்ற இடங்களில் குழந்தைகளுடன் உங்களுடைய நேரத்தை செலவிடலாம்.

கோடை விடுமுறை வரப்போகுது. இந்த நாட்களில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? என்ற தேடல்கள் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும். பொருளாதார சூழல் மற்றும் பணிச்சுமை காரணமாக பல நேரங்களில் சுற்றுலா செல்ல முடியாத நிலைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள். இது குழந்தைகளை மனதளவில் பாதிக்கும். இதுப்போன்ற நிலையில் உள்ள பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால்? குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற நெல்லையின் மினி ஊட்டியான மாஞ்சோலைக்கு சென்று வரலாம். ஆம் அனைத்துத் தரப்பட்ட மக்களும் குடும்பத்துடன் வந்துச் செல்லக்கூடிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை.
மாஞ்சோலையும் இயற்கை சூழலும்:
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மாஞ்சோலை சிறந்த தேர்வாக அமையும். திருநெல்வேலி என்றால் அல்வாவும் நெல்லையப்பர் கோவில் மட்டுமல்ல மணிமுத்தாளி அணை, புலிகள் காப்பகம் என பல இடங்களும் பேமஸாக உள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்கள் மக்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்கு அத்தகைய அழகைக் கொண்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆங்காங்கே அமைந்துள்ள வீடுகளும், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
குழந்தைகளுக்கு தேயிலைத் தோட்டம் குறித்த முழுமையான தகவல்களையும், வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான சூழலையும் அனுபவிக்க விரும்புவோர் தாராளமாக இங்கு வருகை தரலாம். ஏழைகளின் ஊட்டி, குட்டி அல்லது மின ஊட்டி என்றழைக்கப்படும் மாஞ்சோலைக்கு கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்வது போன்று நினைத்தவுடன் சொல்லமுடியாது. அப்புறம் எப்படித் தான் செல்ல வேண்டும் என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான முழு விபரங்களும் இங்கே உங்களுக்காக.
மாஞ்சோலைக்கு எப்படி செல்வது?
மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பணிகள் அனைவருக்கும் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று வனக்காப்பாளர்களிடம் அனுமதி பெற வேண்டும். கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு திருநெல்வேலி மழை பெய்தமையால் சாலைகள் சீரற்று உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் அனுமதி கிடையாது. முன்னுரிமையின் அடிப்படையில் தினமும் 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் திருநெல்வேலியிலிருந்து காலை மற்றும் மதிய வேளைகளில் பேருந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது.
காரில் செல்ல அனுமதி பெற்றுள்ள சுற்றுலாப்பயணிகள் மாஞ்சோலை செல்லும் வழியில் மணி முத்தாறு அணை, அருவி போன்ற இடங்களில் குழந்தைகளுடன் உங்களுடைய நேரத்தை செலவிடலாம். கண்டிப்பாக சுமையோடு அழகும் நிறைந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பேரழகு கொண்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.
What's Your Reaction?






