லட்சத்தீவு ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?
மக்கள் தொகை மிகவும் குறைவு தான். ஆனாலும், இங்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி கிடையாது
இந்திய வரைபடத்தில் அரபிக் கடலில் சிறு சிறு புள்ளிகள் இருக்கும். அது எல்லாம் தீவுக் கூட்டங்கள். ஆம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட லட்சத்தீவு தான் அவை. உண்மையிலேயே இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்கும் அதை சொர்க்க பூமி என்றே சொல்லலாம். கவரத்தியை தலைமையிடமாக கொண்ட இந்த தீவில் அகத்தி, அமினி, கட்மத், அந்த்ரூத், மினிகாய், கில்தான், சேத்லத், பித்ரா உள்ளிட்ட 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை மிகவும் குறைவு தான். ஆனாலும், இங்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி கிடையாது.
மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், லட்சத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. அதேபோல், சுற்றுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கிகிறது. ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இங்குள்ள கடற்கரையில் உள்ள மணல் வெள்ளை நிறத்தில் காணப்படும். அதில் மாலை நேரத்தில் அமர்ந்து ஓய்வு எடுப்பதே, இங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு.
அகத்தி என்ற தீவில் விமான நிலையம் இருப்பதால், கொச்சியில் இருந்து தினசரி இங்கு விமானம் இயக்கப்படுகிறது. கொச்சியில் இருந்தும் மங்களூருவில் இருந்தும், இந்த தீவுகளுக்கு கப்பல் போக்குவரத்து உண்டு. இத்தகைய பெருமைமிகு லட்சத்தீவில் உள்ள, 2 கடற்கரைகளுக்கு நீலம் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.
டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை சார்பில், தூய்மையான சுற்றுச்சூழலுக்கு உகந்த இடங்களுக்கு, ஆண்டுதோறும் நீலம் விருது வழங்கப்படும். அந்த வகையில்,இந்த ஆண்டு லட்சத்தீவின் மினிகாய் தீவில் உள்ள கடற்கரையும், கட்மத் தீவில் உள்ள கடற்கரையும் விருது பட்டியலில் சேர்ந்திருக்கிறது. இதற்காக லட்சத்தீவு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சத்தீவில் நான் வேலை பார்க்கும்போது, அறிமுகமான மீனவ நண்பர் பரக்கத் அலியை, இப்போது தொடர்பு கொண்டு பேசினேன். ’ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது நண்பா. உங்க ஊரை ரொம்ப சுத்தமாக பராமரிக்கிறீங்க போல, நீலம் குறியீடு பெற்றிருக்கீங்க..வாழ்த்துக்கள்’ என்றேன்.
அதற்கு நன்றி தெரிவித்த அவர், “இந்த பூமியையும், கடலையும் நாங்க கடவுளாகத் தான் பார்க்கிறோம். நாம என்ன விதைக்கிறோமோ அது தான் திரும்ப கிடைக்கும். இன்றைக்கும் எந்தவித சண்டை சச்சரவு இல்லாம வாழ்றோமுன்னா அதுக்கு ஆண்டவன் தான் காரணம். நாங்க இங்கே மீன் தொழில் செய்றோம். கரையில்தான் மீனை வெட்டி காய வைப்போம். ஆனால், கடற்கரையை எப்போதும் சுத்தமாகத் தான் பராமரிப்போம். இங்கே திருமணம் முடிந்தபிறகு பெண்கள் அவர்கள் வீட்டில் தான் இருப்பார்கள். ஆண்கள் தான் வரதட்சனை கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டில் தான் புதுமாப்பிள்ளை வசிக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு நாங்க முக்கியத்துவமும், மரியாதையும் கொடுப்போம். அதே மாதிரி தான் இந்த மண்ணையும் பாதுகாப்போம்’’ என்றார்.
அமைதியை விரும்புகிறவர்கள். ஒருமுறை லட்சத்தீவுக்கு சென்று வாருங்கள். அருமையான தேசம் அது.!
What's Your Reaction?