சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் ராமேஸ்வரம் கடல்
சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் ராமேஸ்வரம் கடல் நடுவே அமைந்துள்ள குருசடை தீவின் அழகை விவரிக்கிறது
இயந்திர மயமாகிவிட்ட இன்றைய உலகில்…கவலை மறந்து இயற்கையை ரசிப்பது என்பதே தனி சுகம் தான்…அதுவும் கடலுக்குள் பயணித்து அங்கே தனித்திருக்கும் தூய்மையான இயற்கையை ரசிப்பதென்றால் கேட்கவா வேண்டும்…. ஆம் அப்படி ஒரு அழகிய தீவை அறிமுகம் செய்திருக்கிறது தமிழக வனத்துறை…. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு குருசடை, சிங்கிள், முயல், வான், வாழை, முல்லி உள்ளிட்ட 21 தீவுகள் அமைந்துள்ளன.
இந்த தீவுப் பகுதிகளில் பொதுமக்கள், மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குருசடை தீவிற்கு மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு வனத்துறை சார்பில் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மாலத்தீவு போலவே காட்சியளிக்கும் குருசடை தீவு இயற்கையின் வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. ராமேஸ்வரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஏறத்தாழ 66 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது குருசடை தீவு. Also Read – அரசு பேருந்தில் உருவான திடீர் அருவி! – திகைத்து போன பயணிகள் இந்த அழகிய தீவை கண்டு ரசிக்க ஒரு நபருக்கு தலா 300 ரூபாய் என வனத்துறை சார்பில் படகு சவாரிக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குந்துகால் கடற்கரையில் இருந்து தொடங்கும் படகு சவாரியில், இரண்டு கடல் மைல் தொலைவிற்கு கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்து, குருசடை தீவை சென்றடையலாம். அதன்பின், அங்கிருந்து பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பைபர் படகுமூலம் கடலில் சென்று அங்குள்ள பவளப் பாறைகளை கண்டு ரசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தீவிற்கு வந்து, அங்குள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்களை கண்டு ரசித்தபடியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மறு கரையில் உள்ள கடல்பாசிகளை பார்வையிட்டு மகிழலாம். அது மட்டுமன்றி கடலில் உள்ள மீன்களை ஆய்வு செய்வதற்காக, பிரிட்டிஷ் காலத்தில் சுண்ணாம்பு கற்களால் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடம் ஒன்றும் இந்த தீவின் நடுவில் அமைந்துள்ளது. அங்கு பழங்காலத்து மீன்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக வைக்கப் பட்டுள்ளது.
அத்துடன், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான திமிங்கிலத்தின் முதுகு தண்டு, டால்பின் எலும்பு துண்டுகள், மிதவை கற்கள், வரிக்குருவி சங்கு, கிரிசங்கு, யானை சங்கு உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த குருசடை தீவில் இன்னும் எத்தனையோ அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன என்றும் நேரில் சென்று பார்த்தால் தான் அதை உணர முடியும் என்கிறார் சுற்றுலாப்பயணி நிவேதா… அதே நேரம், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எனவே, இங்கு குடிநீர், கழிப்பறை, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?