ஜெ.ஜெயலலிதா: இவரைப் போல் ஆளுமையுள்ள வீர மங்கை இனி பிறக்கப் போவதில்லை!!!
J.Jayalalitha History in tamil

ஜெ.ஜெயலலிதா: இவரைப் போல் ஆளுமையுள்ள வீர மங்கை இனி பிறக்கப் போவதில்லை!!!
செல்வி ஜெயலலிதா அவர்களின் சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாற்றை மீண்டும் ஒரு முறை நினைவு கூரலாம்.
6 முறை முதல்வராக இருந்து, மக்களின் நன்மைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த இரும்பு பெண்மணியின் வாழ்க்கை பயணத்தை பார்ப்போம்.
'அம்மா’, 'புரட்சி தலைவி' என்று அன்புடன் அழைக்கப்படும் செல்வி ஜெயலலிதாவின் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. "ஜெ.ஜெயலலிதா எனும் நான்" இந்த வாசகத்தைக் கேட்டாலே மெய் சிலிர்க்கும். இவரின் கம்பீர குரலையும், ஆளுமையையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற அவரின் வாக்கியத்திற்கு ஏற்ப மக்களின் முதல்வராகவே வாழ்ந்து மறைந்தவர் செல்வி ஜெயலலிதா.
ஆரம்ப வாழ்க்கை
ஜெயலலிதா, பிப்ரவரி 24, 1948 அன்று கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டில், ஜெயராம் வேதவல்லி தம்பதியினருக்கு மகளாய் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோமளவல்லி. ஒரு வயதில் ஜெயலலிதா என்று பெயர் மாற்றப்பட்டது.1950-இல் இவர் தந்தை மறைவிற்கு பிறகு பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.
கல்வி
சில வருடங்கள் பெங்களூரில் வாழ்ந்தபிறகு, 1958 இல், ஜெயலலிதா தனது தாயாருடன் சென்னைக்குச் சென்று, சர்ச் பார்க் கான்வென்ட்டில் தன் பள்ளி படிப்பைத் தொடர்ந்தார்.பள்ளிப்படிப்புத் தேர்வுகளில் தனது மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். மேலும், கல்லூரிப் படிப்பிற்கான உதவித்தொகையைப் பெற்றார். இருப்பினும், அவரது குடும்பத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க திரைப்படங்களில் நடிக்க வேண்டியதாயிற்று.
திரைப்பட வாழ்க்கை
தாயின் வற்புறுத்தலால் வழக்கறிஞராக வேண்டும் என்ற தனது கனவைத் தியாகம் செய்து நடிகையானார் செல்வி ஜெயலலிதா. 1961 ஆம் ஆண்டு ‘ஸ்ரீ ஷைல மஹாத்மே’ என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு 'வெண்ணிற ஆடை' என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடித்துள்ளார். திரையுலகம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த பல்துறை நடிகையாக இன்னும் கருதப்படுகிறார்.
அரசியல் வாழ்க்கை
நடிகரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டியாக இருந்து, அவரை அரசியலில் அறிமுகப்படுத்தினார். இவர் 1982-இல் அ.தி.மு.க வில் இணைந்தார். பின் 1984-இல் ராஜ்யசபா உறுப்பினரானார். 1991-இல், தனது 43-ஆவது வயதில் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். இவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகள், மதுவிலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடையெனப் பலவிதமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினார். பெண்களைக் காவல்துறையில் சேரவும் ஊக்குவித்தார்.
ஜெயலலிதாவுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் கவுரவங்கள்
- 1972-இல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது.
- 1991-இல் மெட்ராஸ் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்தில் முனைவர் பட்டம் வழங்கியது.
- 1993-இல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால், டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கப்பட்டது.
- 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இவருக்கு அறிவியலில் முனைவர் பட்டம் வழங்கியது.
- 2003-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
இதைத் தவிர பல உலக நாடுகளும் இவருக்கு "தசாப்தத்தின் பெண் அரசியல்வாதி", "கோல்டன் ஸ்டார் ஆஃப் ஹானர்" போன்ற பல பட்டங்களையும், விருதுகளையும் வழங்கியுள்ளது.
ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்கள்
ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவிலேயே, தனது மாநில மக்களின் நலனுக்காக சிறந்த இலவச திட்டங்கள் அறிவிப்பதில் முதன்மையானவர் செல்வி ஜெயலலிதா. பெண்களை மையப்படுத்திப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் அவரின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன. அதிகத் திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததும் இவர் தான்.
தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா லேப்டாப், அம்மா குடிநீர், அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள், அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் ஃபேன், அம்மா காப்பீடு, அம்மா பார்மஸி, தாய்ப்பாலூட்டுவதற்கு தனி அறை போன்ற எண்ணற்ற நல திட்டங்களைச் செயல்படுத்தியவர். இன்றும் அவர் தொடங்கிய அம்மா உணவகத் திட்டம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் மரணம்
ஜெயலலிதா, செப்டம்பர் 22 2016 அன்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததை தொடர்ந்து, மாரடைப்பு காரணமாக டிசம்பர் 5 2016 அன்று காலமானார். மேலும் பதவியில் இருந்த போதே இறந்த இந்தியாவின் முதல் பெண் முதல்வரும் இவரே.
மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பல சிறப்பான நலத்திட்டங்களைச் செயல்படுத்திய செல்வி ஜெயலலிதா, தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துச் சரித்திரம் படைத்துவிட்டார்.
தோன்றிற் புகழோடு தோன்றுக! புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவின் பிறந்தநாள்
"மக்களால் நான் மக்களுக்காக நான்", அம்மா, என்ற மந்திர சொல்லுக்கு மகத்தான மணிமகுடமாய் திகழ்ந்த புரட்சிதலைவி செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள்
- ஆளுமையையும் திறமையையும் நிலைநிறுத்திய தங்கத்தாரகை
- இதுபோன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் இல்லை என்று சொல்ல வைத்த அம்மா
- சரித்திரத்தில் தடம் பதித்த ‘புரட்சித் தலைவி’ ஜெ.ஜெயலலிதா
ஆண்டுகள் போயினும், ஆட்சிகள் மாறினும் காட்சிகளும் கொள்கைகளும் மாறினும், “ஜெயலலிதா மட்டும் இப்போது இருந்திருந்தால்?” என்ற வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர் கொண்டு வந்த எண்ணற்ற மகளிர் மற்றும் சமூக நலத் திட்டங்கள் காலமெல்லாம் அவர் நினைவைப் போற்றும்.
பிறக்கும் போது பெரிய புகழ் எதுவும் இல்லை, ஆனால் மறைந்த பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இப்படிப்பட்ட ஆளுமை இருந்திருந்தால், என்று அனைவரையும் நினக்கும் அளவுக்கு தனது திறமையால் உயர்ந்தவர் ஜெயலலிதா.
நல்லாட்சி கொடுத்தாரா, இல்லை ஊழல் ஆட்சி புரிந்தாரா? என்ற விவாதத்தங்களையும் மீறி, தனது ஆளுமையையும் திறமையையும் நிலைநிறுத்தி, இதுபோன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் இல்லை என்று சொல்ல வைத்த பெருமையை, சரித்திரத்தில் பதியச் செய்த ‘புரட்சித் தலைவி’ செல்வி ஜெயலலிதா அவர்கள்.
மிகப் பெரிய ஆளுமைக்கு பிறகு சிறந்த தலைவர்கள் பொறுப்பேற்றிருந்தாலே, அவர்களின் திறமை விமர்சிக்கப்படும் என்ற நிலையில், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை இன்றைய அதிமுக தினம் தினம் சந்தித்து வருகிறது. ஒரு ஆளுமை இல்லாவிட்டால் எந்த அளவிற்கு ஒரு கட்சியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதற்கு தற்போது அதிமுகவின் நிலைமையை உதாரணமாக சொல்லலாம்.
What's Your Reaction?






