ஓய்வில் மனம்
Tamil kadhaigal
அன்று… பூக்கடைப் பெண் நான் கேட்காமலே சாமந்தி மாலையை என் கையில் கோர்த்தாள். நீட்டிய நோட்டை வாங்கிக்கொண்டு “பாக்கிய வர்றப்ப தரட்டுமா அப்பா ?” என்றாள். தலையசைவில் ஒரு சரியையும் செருப்பை கடைக்கு கீழேயும் உதிர்த்துவிட்டு கோவிலுக்குள் நுழையும்போது நாற்பது வயது பெண் அப்பா என்று விளிப்பதில் உள்ள நெருடலை ஓரங்கட்ட முயற்சித்தேன். அன்று மட்டுமில்லை, என்றுமே எல்லாமே வழக்கம்தான் . வழக்கமாக வரும் கோவில், செருப்பு விட வழக்கமான கடை , வழக்கமான பூமாலை, வழக்கமான அப்பா என்ற சொல்லின் நெருடல்.
பணியில் இருந்து இருந்து ஒய்வு பெறும் முன்னர் இது எதுவுமே வழக்கம் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை, எப்பவுமே அருகில் இருந்த இந்த கோவிலுக்கு எப்போதோ மனைவியுடன், தவிர்க்க இயலாமல் வருவதுதான். பூக்காரி அப்பா என்று கூப்பிட்டதில்லை. அல்லது கூப்பிட்டதைக் கவனித்ததில்லையோ என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது. எதையும் நிதானமாக யோசிக்கவோ பொருட்படுத்தவோ அவசியமில்லாமல் இருந்தோமோ?
வழக்கமான கோவில் என்று சொல்லமுடியாது. சென்ற நூற்றாண்டுகளில் மக்களிடையே வாழ்ந்து மறைந்த ஒரு துறவிதான் இங்கு தெய்வம். அர்ச்சனை அபிஷேகம் கற்பூர தீபம் எல்லாம் உண்டு என்றாலும், மற்றவை எல்லாம் வித்தியாசம். சிலையின் அருகில் சென்று அவரை தொட்டு வணங்கலாம். அதற்கான வரிசை ஒழுங்குமுறையாக இருக்கும். மிகவும் கூட்டம் நிரம்பி வழியும். வியாழக்கிழமைகளிலும் அதே ஒழுங்குமுறை வரிசைக்கிரமம். சிறப்பு தரிசன கட்டணம் எல்லாம் கிடையாது. முந்தி செல்பவர்களை, அவசர கதியில் கோவிலுக்கு வருபவர்களை அதிகம் பார்க்க முடியாது. அப்படி யாராவது முந்தினால் மற்றவர்கள் வழிவிட்டுவிடுவதை காண முடியும். பக்தர்கள் யாரும் துதி செய்வதோ, தோத்திரங்கள் செய்வதோ பார்க்க முடியாது. ஏதாவது கோவிலுக்குச் செல்ல நேர்ந்தால், அங்கு தெய்வத்தின் முன் நின்று லயிக்கலாமோ என்று தோன்றும் முன், பக்கத்தில் ஒருவர் உரக்க தோத்திரம் சொல்லும்போது அந்த உணர்வு கலைந்துபோகும். அந்த வன்முறை இங்கு நிகழ்வதில்லை. கைபேசியை எடுத்தால் கோவில் சிப்பந்தி எங்கிருந்தோ சட்டென்று தோன்றி அதை உள்ளிருத்தப் பணிப்பார்.
குறிப்பிட்ட நேரத்துக்கு ஆராதனை நடக்கும் போது மட்டும் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து பாட்டு பாடுவார்கள். அந்த பாடல் தமிழிலோ ஸமஸ்க்ருதத்திலோ இல்லாவிட்டாலும் பலருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் எல்லாரும் தினசரி அல்லது அடிக்கடி வருபவர்களாக இருக்க வேண்டும். என் போன்ற பாடல் தெரியாதவர்களில் பலர் கைதட்டி தாளம் போட்டு இதில் ஐக்கியமாவார்கள். அன்று ஆராதனை நேரம். அமர்ந்தோம். எனக்கு பக்கத்தில் இரு குழந்தைகள் தங்களுக்குள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். தன் போக்கில் இருக்கும் குழந்தைகளை பார்ப்பது ஒரு பெரிய ஆனந்தம். அக்குழந்தைகளின் இளம் பெற்றோர் பாடலில் ஒன்றி இருந்தனர். அதை பார்க்கவும் நமக்கு உள்ளே ஒரு அமைதி தோன்றுகிறது. எனக்கு முன்னே இருந்த ஒரு இளைஞன் பாடலின் தாளத்திற்கு ஏற்ப தலையை இட வலமாக வெகுவாக ஆட்டிக்கொண்டிருந்தான். அந்த உணர்வும் நம்மை எளிதாகத் தொற்றுகிறது. இங்கு அமர்ந்திருக்கும் இன்னும் ஐம்பது அறுபது பேர்களுக்கும் அந்த ஆராதனையில் ஒவ்வொரு வகையில் ஈடுபாடு இருப்பதாக தோன்றியது. ஈடுபாடுடன் ஒருவேளை பிரார்த்தனையும்
இரண்டுமே இல்லாமல் நான் மட்டுமே சும்மா இருப்பதாக பட்டது. இப்படி இங்கே சும்மா இருப்பது என்பது ஆறு மாதம் முன்பு வரை எனக்கு நினைக்கவே வேடிக்கையாக இருந்திருக்கும். பணியில் இருப்பது என்பது ஒரு பொறுப்பு, உழைப்பு, பொருளாதாயம் என்பதை கடந்து அது வாழ்வுக்கு ஒரு வரைவு மட்டும் முறைமையை கொடுத்து விடுகிறது. அதுவும் அரசாங்க பணியில் மிக உயர்நிலை இல்லாத அதனால் வரும் அரசியல் அழுத்தம் இல்லாத ஆனால் ஒரு பொறுப்புள்ள அதிகாரிக்கு காலை பத்து மணிக்கு துவங்கும் இயக்கம் அவனின் உயிரின் தேர்ந்த ஓட்டம். அது ஒரு தவம்.
ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் இன்னும் ஐந்து வருடம் சேவை இருக்கும் என் மனைவிக்கும் அந்த தவம் இருக்கிறது என்று தோன்றுகிறது. மென்பொருள் துறையில் வெளியூரில் வேலை பார்க்கும் என் பெண்களுக்கும் இது இருக்குமா என்று யோசித்தேன். ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நிறுவனத்தை மாற்றிக்கொள்வதில் என்ன தவம் இருக்க முடியும்? நமக்கு பிடிபடாத தவமாய் இருக்குமோ?
இந்த வேலை தவம் கலைவதில் ஒரு புதிய விழிப்பு வந்துவிடுகிறது. அதுதான் நான் முன்னர் பார்க்காதவற்றை பார்க்க வைக்கிறது. யோசிக்காததை யோசிக்க வைக்கிறது. நாற்பது வயது பூக்காரி அப்பா என்று கூப்பிடுவதில் என்ன நெருடல் தேவை? அதில் இருக்கும் வயதை பற்றிய அறிவுறுத்தலா? இல்லை அதில் இருக்கும் அணுக்கமா? சொல்லப்போனால், அதில் அணுக்கத்தை விட ஒரு நிராகரிப்பு தான் இருக்கிறது. அதில் ஒரு விட்டேத்தியான கையாளுதல் இருக்கிறது. பொருட்படுத்துதல் இல்லை, என்னிடத்தில் அவளுக்கு ஒரு அச்சமில்லை. அதே வயது என் அலுவலக உதவியாளர் ஜெயா, சார் என்று விளித்து வருவதில் ஒரு பணிவு மற்றும் குழைவு இருக்கவில்லை? சில சமயம் சாகசமும் ?
வேலையில் இருந்து இந்த மனிதன் ஓய்வு பெற்ற பின், மனம் மட்டும் ஏன் ஓய்வு கொள்ளாது மேலும் விழித்துக்கொள்ளுகிறது? இந்த புதிய விழிப்பில் முன்னெப்போதையும் விட கிரகிப்பு அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. பற்று குறைதல் என்பதை அல்லவா மனப்பக்குவத்துக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் அடையாளமாக சொல்லுகிறார்கள்? யோசித்தால் பற்று ஒன்றும் எதிலும் அதிகமானதாக தோன்றவில்லை. நம்மை வெளிநிறுத்திக்கொண்டு பார்ப்பதால் தான் இந்த அதிக கிரகிப்பு என்று தோன்றுகிறது. வெளி விஷயங்களில் பற்று குறைவும் அதே சமயம் அரசாங்க வேலை என்கிற மகத்தான அடையாளம் மறைகின்ற போது ஏற்படும் சுயமதிப்பீடுகளின் சரிவுக்கும் இடை தருணம். பூக்காரியையும் பேருந்து நடத்துனரையும் அடுக்கு மாடி காவலாளியையும் பாத்திரங்களாகவோ அவற்றின் கடமைகளாகவோ நோக்காமல் மனிதர்களாக பார்ப்பது ஒரு மேம்பட்ட விழிப்பு தான்.
இப்போது வரிசையில் பிரசாதம் வாங்க நின்றிருந்தோம். இந்த கோவிலில் எந்த நேரம் போனாலும் உணவு உண்டு. சீக்கிய குருத்துவாராக்களில் இப்படி என்று டில்லியில் இருக்கும் பள்ளி நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன். இங்கு எப்போதுமே ஒரு அன்னமாவது தருவார்கள். உச்சி வேளைக்கோ மூன்று அன்னங்கள் . சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் காகித தட்டில் வைத்து தருவார்கள். முதலிரண்டு சுடச்சுட இருக்கும். நெய் மணக்கும் சரியான பதத்தில் பொங்கல். எனக்கு வீட்டில் பொங்கல், தோசை எல்லாம் எப்போதாவது விசேஷமாகத்தான். மற்றபடி சீரியல் என்கிற மேற்கத்திய வியாபார உத்தியை ஆரோக்கியத்தின் ஆதாரம் என்று தீர்மானித்த என் மனைவி அருளும் வெள்ளைக்காரனின் தவிடும் புண்ணாக்கும் தான். கவர்ச்சியான உறைக்குள் அதன் உள்ளிருக்கும் பொருளை பற்றிய உன்னத வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து இன்னும் சில காணொளிகள் உபயத்தில், ஆவின் பால் சேர்க்காமல் இன்னோர் கவர்ச்சி டப்பாவில் வரும் ஓட்ஸ் அல்லது சோயா பாலை ஊற்றி என்னை பலவித வியாதிகளிலிருந்தும் காப்பாற்றிவிட்ட திருப்தியுடன் அலுவலகம் சென்று விட்ட பின்னர்தான் நான் இங்கே வந்தது. உடுப்பி உணவகமும் நம் ஆசையை தீர்த்துக் கொள்ள பக்கத்தில் இருக்கிறது. ஆனால் இந்த கோவிலில் அருமையான பொங்கல் மட்டுமல்லாமல் இன்னொரு வசதியும் இருக்கிறது. தொன்னை முழுதும் வாங்காமல் கொஞ்சமாக கையளவில் பாதி போல வாங்கி சாப்பிடலாம். உணவகத்தில் முழுதும் சாப்பிட்டால் வரும் குற்ற உணர்வோ, அல்லது மீதி வைத்தால் வரும் இன்னொரு குற்ற உணர்வோ இல்லாமல் சற்று ருசிக்கு மட்டும் சாப்பிடுவது இங்கு சௌகரியம். இப்போதெல்லாம் வயிற்றுக்காக அல்ல, புலனுக்குத்தான் பொங்கல் தேவைப்படுகிறது. ருசி.
அன்று பிரசாதம் தீர்ந்து அடுத்த அண்டா வரும் சில நிமிட இடைவெளி. “இப்போது மதிய வேளை சாப்பாடு ஆரம்பிக்கும் நேரமோ” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்க அப்போதுதான் பக்கத்தில் ஒருவர் வந்து நின்றிருந்ததை கவனித்தேன். ஜீன்ஸ் கால்சராயும் ஓரு முழுக்கை சட்டை முழங்கை வரை மடித்து சராசரி உயரத்தை விட கொஞ்சம் நெடிய, சராசரி உடல் வாகு, திருத்தமான தாடியுடன் கூடிய ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய நபர். கவனத்தை கவர்ந்த இன்னொரு அம்சம், அந்த ஆளின் இரு தோள்களிலும் மாட்டப்பட்டு பின்னால் முதுகை அணைத்து அமர்ந்திருந்த பை. வழக்கமாக எல்லா இளைஞர்களும் உபயோகிக்கும் பைதான் என்றாலும் முழுமையாக பொருட்களால் நிரப்பப்பட்டு இதற்கு மேல் திணித்தால் கிழிந்து விடுவேன் என்று முனகும் நிலையில் இருந்த பை , ஏதோ வெளி ஊரில் இருந்து இறங்கி நேராக இங்கு வந்தது போல இருந்தது. ஆனால் முகத்தில் அதற்கேற்ற களைப்பு இல்லை.
“இல்லை” என்றேன் அவனிடம். “அதற்கு பதினோரு மணியாகும். இப்போது பொங்கல் தான் வரும், இங்கு பொங்கல் நன்றாக இருக்கும்” என்றேன் கூடவே. ஆங்கிலத்தில்.
அதற்கு அவன் “உத்திரவாதமாக… இங்கு எல்லாமே அருமையாக தான் இருக்கிறது, சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், தயிர் சாதம், ரவா கேசரி எல்லாமே” தெளிவாக உரைத்தான்.
அவன் என்னைப்போல் பொங்கலுக்கு உபாசகனா அல்லது சாப்பாடை உத்தேசித்தவனா என்று அவனுடைய சொல்லிலிருந்து தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அதையும் மீறி எழுந்த கேள்வி, இப்போதுதான் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வந்தவன் போல இருக்கும் தமிழ் பேசாதவனுக்கு எப்படி இந்த கோவில் இவ்வளவு பரிச்சயம்…
“நீங்கள் முன்பு எப்போதாவது இந்த கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா” என்று கேட்டேன்.
“நேற்று வந்தேன், அதற்கு முந்திய நாள் கூட”
“ஓ! நீங்கள் வெளியூர் என்றல்லவா நினைத்தேன்?”
“ஆம், நான் வெளியூர் தான்” என்றான். சற்றே இடைவெளி விட்டு “கர்னூல். அங்கிருந்து வருகிறேன்”
இதற்குள் அண்டா வந்துவிட்டது. பிரசாதம் விநியோகிப்பவர் இவனிடம் ஒரு தொன்னையை நிரப்பி தர, இன்னொரு தொன்னையும் கேட்டான். அதையும் வாங்கி முதலில் வாங்கியதை என் கையில் கொடுத்தான். இதை எதிர்பார்க்காத நான், சற்றே கலக்கத்துடன் “நான் இவ்வளவு சாப்பிடுவதில்லை… பிரசாதம் என்கிற ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான்…” என்ற என்னுடைய பலவீன எதிர்ப்பை செவிமடுக்காமல் நடந்து போய் அங்கே போட்டிருந்த பாயில் உட்கார்ந்து என்னையும் வந்து உட்காருமாறு சமிக்ஞய் செய்தான்.
“ஏதாவது வேலை நிமித்தம் வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“வேலை தேடி வந்திருக்கிறேன்”
என் முகத்தில் இருந்த வினாக்குறி இன்னும் பெரியதாகி இருக்கவேண்டும். மென்பொருள் துறையில் ஹைதராபாத்தை விட்டுவிட்டு கர்னூல்காரர் சென்னைக்கு ஏன் ?
“நான் ஒரு ஆசிரியன். இளநிலை கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுப்பவன்”
“நீங்கள் விரிவுரையாளரா? என்ன பாடம்?”
“இல்லை, ஆசிரியர். பதினொன்று, பன்னிரண்டு மாணாக்கர்களுக்கு பாடம் எடுப்பவன், கணிதம்”
எனக்கு இப்போது விளங்கியது. சில மாநிலங்களில் பதினோரு பன்னிரெண்டை இளநிலை கல்லூரி என்று சொல்வார்கள்.
“சென்னையில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?”
“இல்லை… ஒருவரும் இல்லை. இவ்வளவு நாள் என் ஊர் பக்கம் இருந்து விட்டேன். சென்னை போன்ற பெரிய ஊரில் இன்னும் வாய்ப்புகள் அதிகம். சென்னை கல்வித்துறையில் தலையாயதாக விளங்குகிறது. மற்றும் எல்லாரையும் அரவணைக்கும் பண்புடையது சென்னை.”
நம் ஊரை அயலார் பாராட்டினால் வரும் மகிழ்ச்சி ஒரு தனிப்பட்ட வகை.
உற்சாகமாக நான் சொன்னேன்.
“இங்கு மற்றெங்கிலும் பார்க்க இயலாத ஒரு சமத்துவம் உண்டு. ஆடவர் பெண்டிர், படித்தவன் படிக்காதவன் என்ற எந்த விதமான பாகுபாட்டையுமே பெரிது படுத்துவதில்லை. புதியவர்கள் அந்நியர்களாக உணர்வதற்கான ஒரு பெரிய காரணத்தை இந்த நகரம் தவிர்த்திருக்கிறது” ஒரு நல்ல கருத்தை சொன்ன உவகை எனக்கு.
அவனிடம் ஆமோதிப்பு தெரிகிறதா என்று எதிர்பார்ப்புடன் நோக்கினேன். அவன் புன்னகையோடு இருந்தான்.
“சென்னையில் வேறு எங்கு போனீர்கள்?”
“கடற்கரைக்கு போனேன். எவ்வளவு பெரியது…” என்றான்.
“இப்போதெல்லாம் நிறைய கூட்டம். ஒரு காலத்தில் அழகாகவும் இருந்தது” என்றேன். அவன் கடற்கரையின் கூட்டத்தையும் அதனால் விளையும் குப்பைகளையும் நிந்திப்பானோ என்று முந்திக்கொண்டேன்.
அவன் சொன்னான் “அந்த கூட்டத்தில் ஒரு துடிப்பு இருக்கிறது. இளைஞர்களின் காதலுக்கும், சிறுவர்களின் விளையாட்டுக்கும், தனிமையில் வந்தவனின் ஏகாந்தத்திற்கும், சிறு வியாபாரிகளின் தினசரிக்கும், எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. இது எதையும் பொருட்படுத்தாது தன் பாட்டுக்கு இருக்கின்ற கடலும் அதன் அலையும்… நான் தினமும் போகிறேன்”
நான் சற்றே மௌனமாகி அவனை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த கடலின் ஆழமும் அதன் அமைதியும் அதே சமயம் அதன் விளிம்புகளில் உள்ள அலைகளின் அழகும், எல்லாமே இவனின் மனப்பான்மைக்கு பொருந்தும் என்று சிலாகித்தேன். கடல் எப்போதும் தன் வேலையில் இருக்கிறது. அதே சமயம் ஓய்விலும் இருக்கிறது.
“உங்களுக்கு இப்போது நிறைய வேலை இருக்கும்” என்று சொன்னேன் இவனுக்கு வேலை கிடைக்க இவன் நேரத்தை நம்மிடம் செலவழித்தால் தகுமா என்ற எண்ணத்துடன். எனக்கும் வீடு செல்ல அவசியம் இருந்தது. நீர் சுத்திகரிப்பு சாதனத்தை பழுது பார்ப்பவர் பதினோரு மணிக்கு வருவார் என்று மனைவி ஆட்டோ பிடிக்கும் அவசரத்தில் சொன்னது.
நான் எழ ஆயத்தமாவதை உணர்ந்து கொண்ட அவன், நீங்கள் சென்று வாருங்கள். நான் இன்னும் சிறிது நேரம் இங்கு இருப்பேன் என்றான்.
“உங்களுக்கு விரைவில் பிடித்தமான வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்” என்று சொல்லி கிளம்பினேன்.
மனதுக்கு இதமாக இருந்தது. எவ்வளவு தெளிவாக அமைதியுடன் பேசுகிறான். புன்னகையோடு இருக்கிறான். இவன் வேலை தேடிக்கொண்டு இருந்தாலும் இவனின் மனம் ஒரு ஓய்வில் அல்லவா இருக்கிறது. இந்த துறவி தெய்வம் இப்படிப்பட்ட மனிதர்களின் மூலம் நமக்கு ஒரு நெகிழ்ச்சியை கொடுக்கிறார் போலும்.
இவனுடைய குடும்பம் பற்றி ஏதாவது கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது. பழுது பார்ப்பவன் வரும் வேலையில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம். இல்லை இவ்வளவு பேசியதே போதும். ஒரு நிறைவு இருக்கும்போது மேலும் ஏன் பேசவேண்டும். பூக்கடையில் செருப்பை மாட்டும்போது ஏன் அவன் கோவிலில் மேலும் சிறிது நேரம் இருப்பதாக சொன்னான் என்று யோசித்தேன். ஒரு வேளை அவன் விண்ணப்பித்திருக்கும் இடங்களுக்கு தொலைபேசி செய்து விசாரிக்கவோ அல்லது மின்னஞ்சலில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காகவும் இருக்கலாம். அவனுடைய கைபேசி எண்ணை வாங்கி இருக்கலாமே… அவன் பெயர் கூட கேட்கவில்லை.
இன்று.
“கரண்டியில் பாதி போதும்” கோவிலில் கொஞ்சம் பொங்கல் வாங்கிக்கொண்டு திரும்பி நடக்கையில், அவன் இருந்தான். அதே புடைத்த பை பக்கத்தில்.
நேராக சென்று அவன் அருகாமையில் அமர்ந்தேன். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். இவனை சந்தித்து இரண்டு வாரங்கள் இருக்குமா? இடையில் ஒரு நாள் தான் கோவிலுக்கு வந்தேன். அதற்கப்புறம் இன்று … ஊருக்கு போய் விட்டு வந்திருப்பானோ? அல்லது இங்கேயே சென்னையிலேயேதான் இருந்து கொண்டிருக்கிறானோ? வேலை கிடைத்து இருக்குமோ?
அவன் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு “மதுரைக்கு போய் விட்டு வந்தேன்” என்றான்.
“வேலை கிடைத்ததா?” என்று கேட்டேன்.
கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னான், “அப்புறம் சில ஊர்கள், கடைசியாக ஈரோடு பத்து நாள்”
“ஓ! இந்த ஊர்களில் எல்லாம் வேலை தேடுகிறீர்களா?”
“இல்லை… கோவில்கள்” என்றான். ஈரோட்டில் என்ன பழம்பெருமை வாய்ந்த கோவில் என்று யோசித்தேன்… பவானியாக இருக்குமோ ?
“தரிசனம் எல்லாம் நன்றாக இருந்ததா. மதுரை, ஈரோடு எல்லாம் எப்படி இருந்தது”
அவன் சொன்னான் “அவ்வளவு சரியில்லை. ஏமாற்றுகிறார்கள்”
“இன்று மீண்டும் போகிறேன்” என்றான்.
“ஹைதராபாத்துக்கா” என்று கேட்க ஆரம்பித்து “கர்னூல்” என்று திருத்திக்கொண்டேன்.
“இல்லை. வேறு எங்காவது. என் ஊரில் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள்”
அவன் முகம் இறுக்கமாக இருந்தது. எனக்கு இப்போது அவனுடைய பையைப் பற்றி யோசிக்கத் தோன்றியது.
“அப்போது வேலை” என்று கேட்டேன். வேறு என்ன கேட்பது என்று தெரியவில்லை.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சிந்தனை வேறு எங்கோ சென்ற மாதிரி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான்.
கொஞ்சம் தயங்கி கேட்டேன் “எங்கே தங்கி இருக்கிறீர்கள்”
“நான் ரயில் நிலையத்தில் தான் இருக்கிறேன். இங்கேயும் அவர்கள் எனக்காக ஆட்களை அனுப்பி இருக்கிறார்கள். தனியாக இருந்தால் தீர்த்து விடுவார்கள். கூட்டமாக இருக்கும் இடம் தான் எனக்கு பாதுகாப்பு”
“உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு உதவ மாட்டார்களா? அவர்கள் உங்களை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கமாட்டார்களா? நீங்கள் தனியாக இப்படி…?” என்னுள்ளே பலப்பல கேள்விகள் தொடர்ந்து உதித்த வண்ணம் இருந்தன…
“என் உறவினன் ஒருவன் தான் என்னுடைய முக்கிய விரோதி… “
“உங்களுக்கு மணமாகிவிட்டதா…” என்று இழுத்தேன்.
“ஒரு மகன் இருக்கிறான். என் மனைவியும் அவர்களுடன் கூட்டு” என்றான்.
எனக்கு ஏதோ உறைத்த மாதிரி இருந்தது!!
“நான் இப்போது கைப்பேசியை கூட தூர எறிந்து விட்டேன். இல்லை என்றால் அதை வைத்து நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடித்து விடுவார்கள்… துரத்துகிறார்கள். துரத்துகிறார்கள்”
நான் மலைத்து அமர்ந்திருந்தேன். கொஞ்சம் நன்றாகவே புரிந்த மாதிரி இருந்தது.
அவன் மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்க தொடங்கினான். நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் சும்மாவே உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் படபடப்பு உணர்ந்தேன்.
“எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். கடூரமாக இருக்கிறார்கள். இன்று பொங்கல் தந்தவன் கூட. இன்னொரு தடவை கேட்டபோது வேண்டா விருப்பாகக் கொடுக்கிறான்” இப்போது அவன் தெலுங்கில் ஏதோ முணுமுணுக்கவோ பேசுவதுக்கோ மாறிவிட்டான்
அவன் வேறு பக்கம் திரும்பி பையை கொஞ்சம் திறந்து உள்ளே ஆராய தொடங்கினான்.
நான் சட்டென்று எழுந்து நகர்ந்தேன். கொஞ்சம் எட்ட சென்று அங்கே இருந்த குழாயில் கை கழுவும் போது அவனை திரும்பி பார்த்தேன். அவன் கை இன்னும் உள்ளே துழாவிக்கொண்டிருந்தது. அவன் முகம். அவன் என்ன தேடுகிறான் என்பதற்கான குறி இருக்கிற மாதிரி தெரியவில்லை. தொலைத்து விட்டான். அவ்வளவுதான். வெளியே வருகையில் துறவியின் சன்னதிக்கு நேர் எதிரில் சற்று நிற்க தோன்றியது. செருப்பு விடட கடையில் பூக்காரி “என்னப்பா இவ்வளவு நேரம் இன்னைக்கு… கூட்டம் கூட இல்லையே” என்று கேட்டாள். அவளை நின்று நோக்கினேன். வழக்கமாக போகிற போக்கில் இல்லாமல் நான் நின்று அவள் சொல் கேட்பது அவளுக்கும் புதியதாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு புன்னகை அவளிடம். நானும் புன்னகையுடன் சொன்னேன் “அம்மா, இன்னைக்கு கொஞ்சம் வேண்டிக்கொண்டேன்”.
What's Your Reaction?