அரசனும் அணிலும் | tamil story

Tamil stories

Dec 6, 2024 - 15:39
 0  10
அரசனும் அணிலும் | tamil story

அரசனும் அணிலும் | tamil story

 

அரசனும் அணிலும்

 

 

முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். இந்த நாட்டில் நமக்கு இணை யார் என்று அவனுக்கு ஒரே கர்வம். 

இளம் வயது, நிறைய படித்தவன், அறிவாளி. நாட்டிலேயே அவனுக்குச் சமமான பலமும் வீரமும் உள்ள வாலிபர்களே கிடையாது. 

அதோடு, அந்தக் கால ராஜா அல்லவா, நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார”னும் அவன்தான். 

ஒருநாள் பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது, வயதான, அறிவுக்கூர்மை மிக்க தனது மந்திரியிடம் அவன் சொன்னான்.

ஒருவன் கூட என் முன்னால் ஒருக்காலும் தற்பெருமை பேசமாட்டான் என்பது திண்ணம். எல்லாரையும் விட எல்லா வகையிலும் நான் மேலானவன் அல்லவா ?” தம் இளம் மன்னன் கூறுவதையெல்லாம் வழக்கமாய் ஆதரிக்கும் கிழட்டு மந்திரி அன்று ஒன்றும் சொல்லவில்லை. 

புன்சிரிப்புக் கூடச் செய்யவில்லை. அரசனுக்கு ஒரே வியப்பு. ஏன் சும்மா இருக்கிறீர்கள் மந்திரியே ?” என்று கேட்டான். 

உடனே அவர் புன்முறுவலுடன், “என் ஐயனே, உள்ளதைச் சொன்னால், உன் முன் யாரும் பெருமையடித்துக் கொள்ள மாட்டார் என அவ்வளவு உறுதியாய் நீ இருக்க முடியாது. எல்லாரையும் விட எதிலும் நீயே உயர்ந்தவன் என்பதெல்லாம் சரிதான். ஆனால் இதை உணராத சிலர் இருப்பதும் சாத்தியமே. ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது கர்வம் உண்டு. ஒரு சிறுவன் கூட தன்னைப் பெரிய சூரனாக நினைத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோமே ! ஆகையால், என்றைக்காவது, யாராவது, உன் மேன்மையை அறியாமல், உன் முன்னால பீற்றிக்கொள்ளலாம். அப்போது அவனைக் கவனிக்காமல் விடுவதே அறிவுக்கு அழகு மற்றவர்கள் பெருமை பேசிக் கொள்வதையெல்லாம் மதித்துக் கொண்டிருந்தால், நம் மன அமைதிதான் போய்விடும்,” என்றார். 

மந்திரி பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஒரு சின்னஞ்சிறு அணில், அவர்கள் முன்னால் குதித்து ஒரு பளிங்குத் தூண்மேல் தாவியது. அதன் முன்னங்கால்களில் பிடித்துக் கொண்டிருந்த ஒரு காசை மன்னருக்கும் மந்திரிக்கும் அது தூக்கிக் காட்டியது. 

ராஜாவுக்கு வேடிக்கையாயிருந்தது. அவனுடைய புன் முறுவலைப் பார்த்து அணில் பாடியது:

பார், பார், என் பணம் பார், பாரில் எவர்க்குண்டோ இத்தனைதான்? பார் அவன், பொறாமை பார், பார்வையிலே அவன் ஏக்கம் பார். 

மன்னன் கோபத்துடன் அணிலை நோக்கிப் பாய்ந்தான். மந்திரி ஏதும் சொல்வதற்கு முன்னால், அணில் ஓடியே போய் விட்டது. 

ஆனால் ஓடுகிற ஓட்டத்தில், காசைக் கீழே போட்டு விட்டது. காசை எடுத்துப் பையில் போட்டுக் கொண்ட மன்னன், மந்திரியைப் பார்த்து மனநிறைவுடன் முறுவல் செய்தான். 

மந்திரியார் ஒன்றும் பேசவில்லை. அன்று மாலை ராஜாவும் மந்திரியும், அண்டை நாடுகளின் தூதர்களுடன் முக்கியமான பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மேலேயிருந்து அணிலின் குரல் கேட்டது.

அரசர்க் கேது இச்செல்வமும் செருக்கும், உரக்கச் சொல்வேன், அடியேன் பணம்தான்! என்றது.

உடனே இரத்தம் கொதித்தது அரசனுக்கு மதிப்புக்குரிய விருந்தினர் முன் தன் கொதிப்பை அடக்கிக் கொள்ளும்படியாயிற்று. அணிலோ தூணுக்குத் தூண் தாவி தன் பாட்டைப் பாடியது. 

தூதர்களும் கேட்டார்கள், அணிலின் கானத்தை, ஆனால் அரசருக்குக் கோபம் வருமே என்பதால், சிரிக்கவும் முடியாமல், ஒன்றும் சொல்லவும் முடியாமல் தவித்தார்கள். 

விருந்தாளிகள் தம் அறைகளுக்குச் சென்ற பிறகு அரசன் அரண்மனையெல்லாம் அணிலைத் தேடிப் பார்த்தான். அது கிடைக்கவில்லை. 

ஆத்திரத்தால் அமைதி இழந்து அன்று இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தான். 

ஏழைகளுக்குத் தானம் கொடுத்து நாளைத் துவக்குவது அரசன் வழக்கம். மறுநாள் காலை அவன் தானம் கொடுத்துக் கொண்டிருக்கையில், அணிலாரும் கதவருகே தோன்றி, தன் கவிதையைத் தொடங்கினார். 

பிச்சை போடும் பெருமை பாரீர், பிச்சை தருவது என் பணத்தாலே ஐயம் இட்டு ஐயன் உறும் பெருமை, ஐயா துட்டால், ஐயா துட்டால்

பிடி அந்த அணிலை!” எனக் காவலரை ஏவினான் அரசன். திரும்பவும் அணில் பறந்தோடி விட்டது. அரசனும் மீண்டும் கோபத்தை அடக்கிக் கொள்ளும்படி ஆயிற்று. 

சில மணி நேரம் கழித்து மன்னன் மதிய உணவுக்குப் புறப்பட்டபோது, சின்ன அணில் சன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கீச்சிட்டது. 

விந்தை பாரீர் விந்தை பாரீர், எந்தன் பணத்தால் எண்திசை வேந்தன் பந்தி தன்னில் பல்சுவை உண்டு சிந்தை மகிழ்வான், சிந்தை மகிழ்வான்! 

சினத்தால் துடித்தான் மன்னன். ஒருபிடி சோறு உள்ளே இறங்கவில்லை. அவனுடைய சேவகர்கள் அணிலைப் பிடிக்க அங்குமிங்கும் ஓடினார்கள். 

அதுவோ மாயமாய் மறைந்தது. இரவு வந்தது. இரவு உணவையாவது நன்றாய் சாப்பிடலாம் என அரசன் புறப்பட்டான். மறுபடியும் அணில் அவன் முன் தோன்றிப் பகலில் பாடிய பாட்டையே பாடியது. 

பாவம், ராஜாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் பையிலிருந்து அணிலின் காசை எடுத்து, வீசி எறிந்தான் அதன் பக்கமாய். 

அதைப் பொறுக்கிக்கொண்ட அணில், போகும்போதாவது சும்மா போயிற்றா ? ஒரு பாட்டுப் பாடியது:

பலவான் அணிலாம் எனக்கே வெற்றி, உலகோர் கேளிர், உலகோர் கேளீர்; மன்னன் தந்தான் சொத்தைத் திருப்பி சின்ன அணிலின் வலிமைக்கு அஞ்சி!

உடனே வெறிபிடித்தவன் போல் அணிலைத் துரத்தி ஓடினான் அரசன். மறுபடியும் அணில் மாயமாய் மறைந்து விட்டது. மறுபடியும் இரவு மன்னனுக்கு உறக்கமில்லை இரவெல்லாம் அணிலின் சொற்களே அவன் நினைவைச் சுற்றிச் சுற்றி வந்து நையாண்டி செய்தன. 

காலையில் மந்திரியைக் கூப்பிட்டு அரசன் சொன்னான் நாட்டில் உள்ள அணில்களையெல்லாம் அழித்து விடுங்கள் என நம் சேனைக்குக் கட்டளையிடலாம் என்று நினைக்கிறேன். வேறு வழியே இல்லை.” 

அப்போது முதிய மந்திரி “பிரபு, உன் கோபம் புரிகிறது. ஆனால் எல்லா அணில்களையும் நம் வீரர்கள் கொன்றுவிட முடியும் என்பது என்ன நிச்சயம்? நீண்டு பரந்து கிடக்கும் நம் வயல்களிலும், மனிதரே நுழைய முடியாத அடர்ந்த காடுகளிலும், மலை உச்சிகளிலும் அவை லட்சக்கணக்கில் இருக்குமே. 

மேலும் நம் நாட்டுக்குள் நுழைய அணில்களுக்கு என்ன, அரசு அனுமதிச் சீட்டா வேண்டும்அண்டை நாடுகளிலிருந்தெல்லாம் அணி அணியாய் வருமே! நம் வீரர்கள் போரில் சூரர்கள்தான்; ஆனால் அணிலோடு சண்டைபோடு என்றால், அவர்களுக்கு எப்படி இருக்கும்

அப்புறம், உன்னை கேலி செய்யும் அந்த ஒரு அணில் மட்டும் தப்பிவிட்டால், நம் முயற்சி எல்லாம் பாழ்தானே? உன் மக்கள் தாம் என்ன சொல்வார்கள்? வருங்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் என்ன எழுதுவார்கள் ? “ஒரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான், அணில்களுக்கு எதிராகப் படை நடத்தியவன்!” என்று படிக்கும் நாளைய சரித்திர மாணவர்கள் சிரித்திட மாட்டார்களா ?” என்று சொன்னார்.

பின் என்னதான் செய்வேன் நான்.” என்றான் மன்னன். “மன்னனே, அணிலை மதிக்காதே. அது முதலில் தோட்டத்தில் தோன்றியபோதே அதைக் கவனிக்காமல் விட்டிருந்தால், அல்லது கோபப்படாமல் அதன் வீண் பெருமையை வெறுமே கேட்டிருந்தால், இப்படிக் கோபம் அடைந்திருக்க மாட்டாய். இருந்தாலும், ஒருவன் தன் மனப்பான்மையை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.” என்றார் மந்திரி. 

சிறிது நேரம் கழித்து அணில் மீண்டும் பக்கத்தில் வந்தது, பயந்துபோய் அரசன் தன் ஆஸ்தியைத் திருப்பித் தந்துவிட்டான் என்ற பாட்டையே பாடியது. இப்போது அரசன் கலங்கவில்லை. 

மெள்ளச் சிரித்துக் கொண்டே சொன்னான்: 

வலுமிகு அணிலார் அறிவும் பணமும் உலகாள் அரசர்க்கில்லை இல்லை ! ஆழி சூழ் உலகம் அளவில் பெரிதோ, கோழியிடும் முட்டை பெரிதே, பெரிதே! 

இப்போது அணில் திகைத்து, ஆச்சரியத்துடன் அரசனைப் பார்த்தது. மேலே பேசாமல் ஓட்டம் பிடித்தது. அப்புறம் தலை காட்டவே இல்லை.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow