முரட்டு ஆடு - சிறுவர் கதைகள்

Tamil kids stories

Dec 13, 2024 - 19:03
 0  6
முரட்டு ஆடு - சிறுவர் கதைகள்

 

 முரட்டு ஆடு - சிறுவர் கதைகள்

 

 

அது ஒரு மலையடிவாரம்.

அதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.

மலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.

அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.

ஒரு நாள் –

ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.

அதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது.

அதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது.

முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.

மலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.

ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.

தானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.

 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0