குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா? பெற்றோர்களே இது உங்களுக்கு தான்! - WAYS TO DEVELOP READING HABIT
உங்கள் வீட்டு குழந்தைகளை வாரத்திற்கு ஒரு முறை நூலகத்திற்கு அழைத்து செல்வதால் அவர்களது வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் புத்தக வாசிப்பை மேம்படுத்த உதவும் எளிய வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..குழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதால் அவர்களின் எண்ண ஓட்டம், புத்திக் கூர்மை, நினைவாற்றல் மற்றும் பண்புகள் என அனைத்து நல்ல பழக்கங்களும் தானே வளரும். ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமலே போய் விட்டது. அதில் உங்கள் குழந்தையும் ஒருவரா? உங்கள் குழந்தையின் வாசிப்பு திறனை அதிகரிக்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால், குழந்தையின் வாசிப்புத் திறனை வளர்க்கும் எளிமையான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, முயற்சி செய்து பாருங்கள்.
1. அன்றாட பழக்கமாக மாற்றுங்கள்:

உங்கள் குழந்தை பிறந்த நாளிலிருந்தே, நீங்கள் அவர்களை வாசகராக வளர்க்க முடியும். தினசரி உங்கள் குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை படித்து காட்டுங்கள். அல்லது, நீங்கள் படித்த கதைகளை பகிருங்கள். குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயற்சி செய்யுங்கள். இப்படி செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே வாசிப்பு மீது ஆர்வம் வரத் தொடங்கும்.
2. குழந்தைகள் முன் புத்தகம் வாசியுங்கள்:

குழந்தைகளை என்ன தான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலை பார்த்து தான் அவர்கள் வளர்கின்றனர். அதை தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில், நீங்கள் புத்தகம், நாளிதழ், நாவல்கள் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசியுங்கள். அதனை குழந்தைகள் பார்க்கட்டும். தினசரி பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தானாகவே புத்தகத்தை புரட்ட தொடங்குவார்கள்.
3. அடிக்கடி லைப்ரரி விசிட்:

என்ன தான் அலமாரியில் வகை வகையான ஆடைகள் இருந்தாலும், புது துணி எடுக்க கடைக்கு சென்றால் அனைவருக்கும் எங்கிருந்தோ ஆர்வம் வந்துவிடுகிறது. அதே போல தான், குழந்தைகளுக்கு அனைத்து புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஆச்சரியாமாகவும், ஆசையாகவும் இருக்கும். வீட்டிற்கு அருகே உள்ள நூலகத்திற்கு உங்கள் குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை கூடிச் செல்லும் போது, நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும், புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.
4. பிடித்த புத்தகங்களை மீண்டும் படியுங்கள்

ஒரே கதையை மீண்டும் மீண்டும் படித்து காட்டும் போது நீங்கள் சோர்வடையலாம், ஆனால் உங்கள் குழந்தை அதை விரும்பி கேட்க வாய்ப்புள்ளது. எப்படி, ஒரு பாடலை திரும்ப திரும்ப கேட்டு குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்களோ அதை போல தான் இதுவும். குழந்தைகள் கதையிலோ படங்களிலோ முதன்முதலில் தவறவிட்ட விஷயங்களைக் கண்டுபிடிக்க விரும்புவார்கள். அதனால், அவர்களின் கவனத்தை பெறவும், புத்தக வாசிப்பில் சலிப்பு தட்டாமல் இருக்க, அவர்களுக்கு பிடித்த கதைகளை மீண்டும் சொல்லிக் காட்டுங்கள் அல்லது வாசிக்க வையுங்கள்.
5. வாசிப்பு இடத்தை உருவாக்கவும்:

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கிறோம் என்பதை போல, எந்த இடத்தில் புத்தகம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். புத்தகம் வாசிக்கும் போதோ அல்லது குழந்தைக்கு கதை சொல்லும் போதோ, அறையில் விளையாட்டு பொருட்கள், இரைச்சல் சத்தம் எதுவும் இல்லாதது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கவனம் முழுவதும் புத்தக்கம் மேல் இருப்பது போன்ற சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.
6. பரிசு கொடுங்கள்:

ஒரு கதை கேட்டோ அல்லது புத்தகத்தை வாசித்து முடித்தால் அவர்களை பாராட்டும் விதமாக குட்டி பரிசுகளை கொடுங்கள். வாரத்திற்கு ஒரு புத்தகம் வாசிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அவர்களை உற்சாகம் படுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரித்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரும்ப தொடங்குவார்கள்
What's Your Reaction?






