தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்! சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் அசத்தல்
சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சென்னை: ஜூலை மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை சீனாவின் செங்டுவில் FISU 'உலக பல்கலைக்கழக விளையாட்டு 2023' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த விளையாட்டு போட்டிகள் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற வேண்டியவை. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 18 கேம்கள் இருக்கின்றன.
இதில், ஆசிய அளவிலான போட்டி, காமன்வெல்த் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றிருந்த முன்னணி வீரர்/வீராங்கனை பங்கேற்கின்றனர். பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வில்வித்தை, வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல் மற்றும் ஜூடோ போன்ற போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இளவேனில் வாலறிவனும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். இவர் தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்தவராவார். பள்ளியில் படிக்கும் போதிருந்தே இவர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ககன் நரங், இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இவருடைய பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்ற இளவேனில் 2016ம் ஆண்டு மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்று 250.6 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தார். அதேபோல கேரளாவில் நடைபெற்ற சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதிரடியாக பங்கேற்று வெற்றி பெற்று அசத்தினார். இதற்கெல்லாம் உச்சமாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 தங்கங்களை தட்டி சென்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகள் எடுத்து அபாரமான வெற்றியை பதிவு செய்து தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். இளவேனிலின் இந்த வெற்றி தமிழ்நாட்டின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. பல்வேறு முக்கிய விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இந்த வெற்றி குறித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
What's Your Reaction?






