பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைக்கலாமா? - சாஸ்திரம் கூறுவதென்ன?
வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. தினமும் பூஜை அறையில் மந்திர உச்சாடனம் செய்யவேண்டும். இவை வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும்.

நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்களை வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்துவிட வேண்டும். ஏனென்றால் வெள்ளிக்கிழமை அன்று வீடு துடைப்பது, ஒட்டடை அடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களைச் செய்தால் நமது வீட்டின் மகாலட்சுமி வெளியே சென்று விடும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.
பூஜை அறையில் நாம் வைக்கும் பஞ்சபாத்திரத் தண்ணீரை தினமும் மாற்றவேண்டுமா? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கு இருக்கிறது. இவ்வாறு இந்த தண்ணீரை தினமும் மாற்றலாம் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். முடிந்தவரை தினமும் மாற்றுவது என்பது மிகவும் நல்லதாகும்.
அதுபோல ஒரு சிலர் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி பூஜை செய்த பின்னர் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இதிலும் சந்தேகம் இருக்கிறது. அசைவம் சாப்பிடும் நாட்களில் எவ்வாறு விளக்கு ஏற்றுவது என்பதே அந்த சந்தேகம். ஒரு சிலர் அசைவத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்களை குலதெய்வமாகக் கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்கள் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் முகம், கை, கால் மட்டும் கழுவிக்கொண்டு தீபம் ஏற்றலாம்.
ஆனால் சைவ கடவுளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் இவ்வாறு செய்தல் கூடாது. அசைவம் சாப்பிட்டிருந்தால் அன்று விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல தினமும் காலை வேளையில் குளித்துவிட்டு முதலில் தீபம் ஏற்றி பூஜை செய்து அடுத்த வேலைகளைத் துவங்குவது என்பது குடும்பத்திற்கு அதிக நன்மையைச் சேர்க்கிறது.
அதுபோல தினமும் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கின் திரிகளை மாற்ற வேண்டுமா அல்லது அதே திரியில் விளக்கேற்ற வேண்டுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த திரிகளை தினமும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நிச்சயம் மாற்ற வேண்டும். இந்த திரிகளை ஒன்றாக சேர்த்து வைத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் உள்ளவர்களை சுற்றி போடும் பொழுது அந்த கற்பூரத்தில் இந்த திரிகளையும் சேர்த்து எரித்து விட்டால் திருஷ்டி கழிந்தது என்று அர்த்தம்.
தென்கிழக்கு மூலையில் குத்துவிளக்கு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படங்களை ஒருபோதும் வைக்கக்கூடாது என வேத சாஸ்திரம் கூறுகிறது.
What's Your Reaction?






