நைட் ஷிப்ட்ல வேலை செய்றீங்களா? அப்போ என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது!
How to resolve Night shift Health issues in tamil

நைட் ஷிப்ட்ல வேலை செய்றீங்களா?
அப்போ என்ன சாப்பிடலாம்? என்ன
சாப்பிட கூடாது!
இரவு நேரத்தில் வேலை செய்வது தூக்கத்தை மட்டும் பாதிக்காது, நமது ஆரோக்கியத்தையும் சேர்த்து மோசமாக பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், உடல்நலப் பிரச்சனைகளை தடுத்து, நமது உடலை ஆரோக்கியமாகவும் ஆக்ட்டிவாகவும் வைத்துக் கொள்ளலாம். இரவில் வேலை செய்பவர்கள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிட கூடாது என்று இங்கு பார்க்கலாம் வாங்க.
இன்றைய நவீன யுகத்தில், இரவு நேரங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரவு நேரங்களில் வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
இதில் மனித உடல் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக இயற்கைக்கு மாறாக மாற்றப்படுகிறது. தூங்க வேண்டிய நேரத்தில் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல், வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இரவு நேர வேலையால் ஏற்படும் தீமைகள்
இப்படி நீண்ட நாட்களாக இரவில் தூங்காமல் வேலை செய்யும் போது, மார்பக புற்றுநோய், மாரடைப்பு, மலச்சிக்கல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு, உடல் பருமன், மன அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், தூக்கமின்மை போன்ற மோசமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இருப்பினும், நல்ல தூக்கம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமாகவும், ஆக்ட்டிவாகவும் இருக்க முடியும். தற்போது, இந்த பதிவில் நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள் என்னென்ன என்பதை காண்போம்.
புரத உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்
இரவு நேரத்தில் பணிபுரியும் போது நீண்ட நேரம் கண் விழித்திருக்க வேண்டியிருக்கும்.
இதனால் ஏற்படும் தூக்க களைப்பை போக்க, சிக்கன், டோஃபு, வான்கோழி மற்றும் பருப்பு போன்ற புரதம் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவை, உடலுக்கு நிலையான எனர்ஜியை அளிக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்
அவகேடோ, ப்ரோக்கோலி, பீன்ஸ், பெர்ரி, ஆப்பிள், முழு தானியங்கள், அகத்தி கீரை, முருங்கை கீரை, கொட்டைகள், ட்ரை ஃப்ரூட்ஸ், உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்.
இவை, குடல் இயக்கத்தை இயல்பாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நார்ச்சத்து உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அதிகமாக டீ, காபி குடிக்க வேண்டாம்
இரவுநேர வேலை செய்பவர்கள் சோர்வை போக்கவும், தூக்கத்தை கட்டுப்படுத்தவும் அதிகமாக டீ மற்றும் காபி குடிப்பார்கள். இது முற்றிலும் தவறு.
ஏனென்றால், டீ மற்றும் காபியில் உள்ள காஃபைன் என்ற மூலக்கூறு தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், நீரிழப்பு, செரிமான பிரச்சனை, மனநலக் கோளாறுகளை உண்டாக்கும்.
அதற்கு பதிலாக, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு அல்லது தண்ணீர் குடிக்கலாம். தூக்கம் பறந்து போய்விடும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
ஒருவேளை என்னால் டீ, காபி குடிக்காமல் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் 1 அல்லது 2 கப் மட்டும் குடிக்கலாம். இருப்பினும், ஷிப்ட் முடிவதற்கு 4-5 மணி நேரத்திற்கு முன்பாக குடிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நொறுக்குத் தீனியை தவிர்த்து விடுங்கள்
இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்காக ஷிப்ட் முடியும் வரை சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்களை சாப்பிடுவார்கள்.
ஆரோக்கியமில்லாத தின்பண்டங்களை தொடர்ந்து சாப்பிடுவது, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புசத்தை தருவதோடு, உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும்.
அதிகப்படியான உடல் எடை நீரிழிவு நோயை உண்டாக்கலாம்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்
இரவு நேரத்தில் கண் விழித்து வேலை செய்யும்போது நமது உடல் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும்.
ஆனால், நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் வறட்சியை குறைக்கலாம்.
மேலும், உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவும். அதேபோல், இரவு உணவு சாப்பிட்ட பிறகு 1 ஸ்பூன் நெய் வெறுமனே எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் உடல் வறட்சியை போக்கும் தன்மை கொண்டது.
சரியான நேரத்தில் இரவு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்
இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய ஆரோக்கிய குறிப்பு இதுதான்.
உதாரணமாக, உங்களுடைய ஷிப்ட் நேரம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது என்றால், 8 - 8.30 மணி என்ற இடைவெளியில் இரவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல், மாலை 4 அல்லது 5 மணிக்கு ஷிப்ட்டில் வேலை செய்பவர்கள் 7.30 - 8 மணிக்குள் இரவு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதால் மெட்டபாலிம் சீராக இருக்கும்.
What's Your Reaction?






