1 மில்லியன் டாலர் பரிசு.. சிந்துவெளி எழுத்து புதிரை விடுவித்தால்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.5 கோடி) பரிசு வழங்கப்படும் என சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா கருத்தரங்கின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சிந்துவெளி பண்பாடு
மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருவச்சிலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், "சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவியல் ஆய்வு" என்ற நூலினை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், 'திராவிட மாடல் அரசு' என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். "இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு" என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின், அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துவதுதான் நம்முடைய நோக்கம். வரலாறும், பண்பாடும், தொல்லியலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டு பேரும் தொல்லியல் ஆர்வலர்கள்! இப்போது கேட்டாலும், இந்த மேடையில் மணிக்கணக்கில் சிந்துவெளியைப் பற்றி பேசக் கூடியவர்கள். இவர்கள் இந்தத் துறைக்கு கிடைத்திருப்பது இந்தத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை கிடைத்திருக்கிறது! சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாட, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து இந்தப் பன்னாட்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இது நம்முடைய அரசின் கடமை!
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு
சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. 'தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்' என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி, நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வுகள்தான். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது, அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது." என்றார்.
1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு
மேலும், 3 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டா முதல்வர் ஸ்டாலின். "ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிந்துவெளி புதிருக்கான உரிய விடையைக் கண்டுபிடித்து சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை வெளிக்கொண்டுவரும் நபர்கள் மற்றும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்ற முதல் முத்தான அறிவிப்பை வெளியிடுகிறேன். சிந்துவெளி பண்பாடு குறித்த ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களுக்கு ஐராவதம் மகாதேவன் பெயரில் ஒரு ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு. தமிழ் பண்பாட்டின் தொன்மையை உலகே தெரிந்து கொள்ள வேண்டும் என ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர்கள் ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இது மூன்றாவது அறிவிப்பு. இந்த மூன்று அறிவிப்புகளும் இந்த துறையின் ஆய்வுகளுக்கு வேகத்தை ஊக்கத்தையும் கொடுக்கும் என நம்புகிறேன்.
இந்திய வரலாற்றை தமிழைத் தவிர்த்துவிட்டு எழுதமுடியாது
சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. பாவாணர், ராசமாணிக்கனார், க.த.திருநாவுக்கரசு போன்ற மாபெரும் அறிஞர்கள் எல்லாம் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். 'சிந்து முதல் வைகை வரை' என்ற நூலை நம்முடைய ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதி இருக்கிறார். டோனி ஜோசப் அவர்கள் மரபணு, மானுடவியல் சார்ந்த ஆய்வுகளை வைத்து நிறைய எழுதிக்கொண்டு வருகிறார். இன்னும் ஏராளமான ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.
What's Your Reaction?